RSS

தாய்லாந்து தொடர் – 5

30 Dec

My Photo மாயவரத்தான்…

தாய்லாந்து உணவு உலகப் புகழ் பெற்றது.

துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு என்ற அறுசுவைகளையும் உள்ளடக்கியது தான் தாய் உணவுகளின் ஸ்பெஷாலிட்டி!

தாய்லாந்து மக்கள் மாமிச பட்சிணிகள். தினமும் எல்லா வேளைகளிலுமே சாப்பிடும் போது மாமிசத் துண்டு பல்லில் ‘நறநற’க்காவிட்டால் தொண்டைக் குழிக்குள் சாப்பாடு இறங்காது. கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் பல தடவைகளில் உணவைக் கொறிப்பார்கள். உணவில் மாமிசம் எவ்வளவு இருக்கிறதோ அதே போல காய்கறிகளும் நிறைய இருக்கும். எனவே தான் ’தொந்தியும் தொப்பையுமாக’ உலவும் அந்நாட்டவர்களைப் பார்ப்பது அரிது!

அவர்களும் முன்பெல்லாம் கையால் எடுத்து தான் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். 1900-களின் ஆரம்பத்தில் இருந்து தான் ஸ்பூன், ஃபோர்க் உபயோகிக்க ஆரம்பித்தார்கள். இப்போதெல்லாம் கையால் எடுத்து உண்ணும் நம்மைப் பார்த்தால் ஏதோ எட்டாவது உலக அதிசயத்தைப் பார்ப்பது போல எஃபெக்ட் காட்டுகிறார்கள்.

அரிசிச் சோறு தான் தாய்லாந்திலும் பிரதான உணவு. இரண்டு கைப்பிடி சாதம், கொஞ்சம் குழம்பு, அதிலேயே மிதக்கும் மீன்/கோழி/பன்றி/இறால் என ஏதாவது ஒன்று, கூடவே ஒரு கீரை வகை. இவ்வளவு தான்!

நூடுல்ஸ், சூப் போன்றவைகள் அடுத்த வேளைக்கான உணவாக இருக்கும். ஒரே வேளையில் ‘அத்தனையும் கொண்டு வா’ என்று ‘ரவுண்டு’ கட்டி சாப்பிடும் பழக்கம் கிடையாது.

பொதுவாகவே வீடுகளில் சமைப்பது கிடையாது. நாடு முழுவதும் ஆங்காங்கே கையேந்திபவன்களும், சிறிய சாப்பாடு கடைகளும் நிறையவே இருக்கும். கையேந்திபவனாக இருந்தாலும், முழு சுத்தத்துடன் தயாரித்து தருவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக சாப்பிடுவார்கள். (கையேந்திபவன் என்றால் கையில் தட்டேந்தி சாப்பிட வேண்டும் என்பதல்ல. தள்ளு வண்டியில் கூடவே பத்து நாற்காலியையும், இரண்டு சிறு டேபிளையும் எடுத்து வந்து விடுவார்கள்.)

இறால் மிதக்கும் படு காரமான ‘தொம் யோம் சூப்’ ரொம்பவே பிரபலம். அந்தப் பெயரில் ஒரு திரைப்படமே வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஃப்ரைடு ரைஸ் என்றால் பல வகை. நூடுல்ஸ் என்றால் அதிலும் பல வகை. சூப்களிலும் கூட!

கீரை வகைகள் நூற்றுக் கணக்கில் உண்டு.

இவ்வளவு இருந்தும் நம்மூரிலிருந்து சுற்றுலா செல்பவர்களுக்கு பெரும்பாலும் ‘தாய்’ உணவு வகைகளைப் பார்த்தால் அலர்ஜியாக இருக்கும்.

ரோட்டோரக் கடைகளில் சாப்பிடுவதா? என்ற அசூயை ஒரு பக்கம். ‘பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி எல்லாம் சமைக்கிற கடையா இருக்குமோ?’ என்ற பயம் ஒரு பக்கம். எந்தச் சாப்பாடு எப்படி இருக்குமோ என்ற கவலை ஒரு பக்கம்!

நம்மூர்க்காரர்களுக்கு ஏற்ற ’தாய்’ உணவு வகைகள் லிஸ்ட் ஒன்று தந்தால் சுற்றூலாவாசிகளுக்கு ரொம்பவே பயனாக இருக்கும் என்று நம் வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.

இதோ ஒரு பொதுவான லிஸ்ட் :

தொம் யோம் சூப் (Thom Yum Soup) – இதில் இறால் போட்டிருக்கும். தேவை இல்லை என்றால் வெஜிடேரியனாக ஆர்டர் கொடுக்கலாம். (Chae – ’ச்சே’ என்றால் தாய் மொழியில் சைவம் என்று அர்த்தம். எனவே ‘தொம் யோம் ச்சே’ என்று கேட்டால் வெஜிடேரியன் தொம் யோம் கிடைக்கும். நல்ல காரசாரமான சூப் இது. நார்த்தை இலை ஸ்மெல் பிடித்தால் இந்த சூப் கண்டிப்பாக பிடிக்கும்.

கெள பாட் ச்சே (Cow Paaht Chae) – வெஜிடேரியன் ஃப்ரைடு ரைஸ். மாறாக முட்டை/கோழி/இறால் போட்டும் கிடைக்கும்

பட் தாய் (Pad Thai) – இது ‘தாய்’ ஸ்டைல் நூடுல்ஸ். காய்கறிகள் / இறைச்சி கலந்து இருக்கும்.

 

கேங் கியோவான் (Gaeng Kiyo Waan) – ’கேங்’ என்றால் குழம்பு. கத்தரிக்காய், கோழித் துண்டு போட்ட குழம்பு வகை

காய்ச்சியோ (Kaaychiyo) – வெங்காயம் இல்லாத ஆம்லெட் – எண்ணையில் பொறித்தது

பக் பூங் (Pak Boong) – பூண்டு, சிவப்பு மிளகாயுடன் கீரை

இந்த லிஸ்ட் போதும். இதிலேயே காய்கறியையோ, இறால், கோழி, மீன் என்றோ மாற்றி மாற்றி சாப்பிட்டுக் கொள்ளலாம். அதே போல நாடு முழுவதும் எங்கே சென்றாலும் வெறும் வெள்ளைச் சோறு மட்டும் கூட தனியாகக் கிடைக்கும். (பருப்பு பொடி, எள்ளுப்பொடி என தனியாக கையில் எடுத்துக் கொண்டு டூர் செல்லும் முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களுக்கான தகவல் இது!)

தாய்லாந்து மக்கள் பாம்பு சாப்பிடுவது கிடையாது. அங்கே உள்ள சீன வம்சாவளியினர் சிலர் சாப்பிடுவார்கள். ஆனால் வெட்டுக்கிளி போன்ற சில வஸ்துக்களை எண்ணையில் பொறித்து நொறுக்குத் தீனியாக சாப்பிடுகிறார்கள். பன்றியும் பிடித்த உணவு.

சாதாரணமாக மேற்படி உணவு வகைகள் ஒவ்வொன்றும் 25 ரூபாய் விலை தான்.

மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி., பிஸா போன்ற ரெஸ்டாரெண்ட்டுகளும் நாடு முழுக்க இருக்கிறது.

தலைநகர் பேங்காக்கிலும், பட்டயா, புக்கட் போன்ற சுற்றுலா ஏரியாக்களிலும் இந்திய ரெஸ்டாரெண்டுகள் நிறையவே இருக்கின்றன. தென்னிந்திய உணவு வகைகளும் கிடைக்கும்.

பேங்காக்கில் சுரியவோங் ரோடு ஏரியாவில் செட்டிநாடு ரெஸ்டாரெண்ட், தமிழ்நாடு உணவகம், மெட்ராஸ் கஃபே, சென்னை கிச்சன், உட்லண்ட்ஸ் இன் போன்ற தமிழக ரெஸ்டாரெண்டுகள் உள்ளன. மற்ற பகுதிகளிலும் இருக்கின்றன.

சாப்பாட்டைத் தவிர, பழ வகைகளை எடுத்துக் கொண்டால் நூற்றுக்கணக்கான பழங்கள் கிடைக்கின்றன. ரம்பூட்டான், மங்குஸ்தான், துரியன் என்ற பல வகைகளுடன் கூடவே வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவைகளும் உண்டு.

தாய்லாந்து துரியன் பழத்திற்கு உலக அளவில் கிராக்கி இருக்கிறது. திடீரென பார்ப்பதற்கு பலாப்பழம் போலவே வெளியில் முட்களுடன் தோற்றமளிக்கும் பழம் இது. பழத்திலிருந்து வெளியாகும் ஸ்மெல் ஏரியாவையே தூக்கும். விமானங்களில் துரியன் எடுத்து வரக்கூடாது என்று கட்டுப்பாடே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி அந்தப் பழத்தில் என்ன தான் டேஸ்ட் இருக்கிறது என்று மக்கள் விரும்புகிறார்களோ தெரியவில்லை. துரியன் பழ சீசனுக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் ஆட்கள் உண்டு. ’முருங்கைக்காயில் மகாத்மியம் இருக்கிறது’ என்று பாக்யராஜ் கண்டு பிடித்தது போல ‘துரியன் ஒரு இயற்கை வயாக்ரா’ என்று எந்த புண்ணியவானோ கண்டுபிடித்து வேறு சொல்லியிருப்பதும் மக்களை துரியன் பக்கம் கவர்ந்திழுத்திருக்கலாம்.

காயும் பழமுமாக இருக்கும் வாழைப்பழத்தை அப்படியே தந்தூரி சிக்கன் ஸ்டைலில் க்ரில் அடுப்பில் சுட வைத்து அதில் சர்க்கரையும், உரைப்பும் சேர்ந்த சாஸ் தோய்த்து உண்பதும் தாய் மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும். இப்படி சாப்பாட்டில் இனிப்பையும், காரத்தையும் ஒரு சேர சேர்த்து சாப்பிடுவதும் கூட ‘பலான’ மேட்டருக்கு உகந்தது என்றும் பேச்சு இருக்கிறது! இவ்வளவும் இருந்தும் வயாக்ராவும் சல்லிசாக மார்க்கெட்டில் ஏன் விற்கிறார்கள் என்பது தனிக் கேள்வி!

கொத்தவரங்காயைத் தவிர நம்மூரில் கிடைக்கும் அனைத்து காய்கறிகளும், பழ வகைகளும் தாய்லாந்தில் கிடைக்கும்.

சாப்பாட்டு விரும்பிகளான தாய்லாந்து மக்கள் அதே அளவிற்கு கடவுள் பக்தியும் மிக்கவர்கள். நாடு முழுவதும் பெரிய பெரிய புத்தர் கோயில்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில கோயில்கள் குறித்து பார்க்கலாமா?

… பயணிப்போம் வாங்க..

Source : http://mayavarathaan.blogspot.com/2010/12/5-555.html

 
Leave a comment

Posted by on December 30, 2010 in Uncategorized

 

Tags: , , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: