RSS

எதுவும் முடியும் தமிழ் எப்படியும் வளையும்! by அன்புடன் புகாரி

07 Jan
தமிழன்னை எனக்குத் தந்தது சில்லறைச் சலுகைகளையல்ல உயர்வான வாழ்க்கையையும் நிம்மதியையும்.

என் பண்பாடும் கலாச்சாரமும் தமிழ் தந்தது. என் அடையாளமும் இருப்பும் தமிழ் தந்தது.

என் பெயரின் உச்சரிப்பில் தமிழ் எனக்குச் சலுகை தந்தது என்றால் எனக்குத் தேவை ஒரு சலுகை அல்ல இரு சலுகைகள். ஒன்று ’ஹா’ என்ற உச்சரிப்பு. அடுத்தது ’Bu’ என்ற உச்சரிப்பு.

‘ஹா’ என்ற உச்சரிப்பை எழுத்தப்படாத ஆனால் ஒலிக்கப்படும் எழுத்தில் தமிழ் வைத்திருந்தது. அதை அடையாளம் கண்டதும் உடனே பயன்படுத்திக் கொண்டேன்.

இந்த B யின் ஓசை அன்பு என்று வரும்போது வந்துவிடும். ஆனால் சொல்லின் முதல் எழுத்தாக வரும்போது வர வழியில்லை. அதனால் நான் கவலைப்படவில்லை. எனக்கு முன்னரே பாரதிகளும் பாலுகளும் கவலைப்பட்டதில்லை.

ஏனெனில் எழுத்தில் இருப்பதை வாசிக்கும்போது கற்றோர் பழகின பயன்பாட்டையே பின்பற்றுவர். அப்படித்தான் பாரதி பாரதிதாசன் என்ற பெயர்களெல்லாம் சரியாக உச்சரிக்கப்படுகின்றன.

’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடியவர் பாரதிதாசன். ஆனால் அவர் பெயரை ஏன் தூய தமிழில் வைத்துக்கொள்ளவில்லை என்று அடிக்கடி யோசிப்பேன். தமிழ்மீதுள்ள பற்றைவிட பாரதியின் மீதுள்ள பற்றுதான் மிகுத்திருந்ததா அவருக்கு என்ற ஐயம் தோன்றும்.

பாரதி என்ற சொல்லும் தாசன் என்ற சொல்லும் தமிழ் மூலச் சொற்கள் அல்ல. தமிழனின் பெயர் என்ற அளவில் அது தூய தமிழாய் மட்டுமே இருக்கத் தேவையில்லை என்று அவர்கள் கருதியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய தமிழ்ப் பற்றைக் குறைத்துக்கூற முடியுமா?

அவ்வண்ணமே, பிறமொழிப் பெயர்களைக் கொண்டிருப்பதாலும், கிரந்தம் பயன்படுத்துவதாலும் ஒருவனின் தமிழ்ப்பற்றை இழித்துக்கூறுவது அறிவுடைமையாய் எனக்குப்படவில்லை.

ஆனால் வெறுமனே கிரந்தத்தை வலியப் புகுத்துதலும், பிறமொழிச் சொற்களிலேயே விருப்பம் மிகக் கொண்டுள்ளமையும் தமிழை அழிக்கச் செய்யும் அறியாமைச் செயலாகத்தான் இருக்கமுடியும்.

சேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலத்தைக் கட்டிக்கொண்டு, தனி ஆங்கிலமே தேவை என்று ஆங்கிலம் கொடிபிடித்திருந்தால் இன்று ஆங்கிலம் இந்த அளவிற்குப் பரந்து விரிந்து உலக மொழிகளின் முதன்மைக்குப் போட்டிபோட்டுக் கொண்டிருக்க வழியில்லை.

பிறந்த குழந்தை பிறந்ததுபோலவே இருப்பதுதான் சரி. அது வளர்ந்தால் கலப்படமாகிக் குரங்காகிவிடுகிறது என்று எண்ணுவது அறிவுடைமையா?

ஓலைச்சுவடி தொடங்கி கணினி வரை குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ் எத்தனை வளர்ச்சியினை அடைந்திருக்கும்?

தமிழின் வளர்ச்சி என்றால் என்ன? தொல்காப்பியனுக்குப்பின் இலக்கண இலக்கிய மாற்றங்களே இல்லாதிருப்பதா? என்றால் அது வாழ்தமிழ் இல்லை. வாழ்ந்த தமிழ். தொடர் தமிழ் இல்லை முடிந்த தமிழ்.

தமிழன் இன்று ஒரு கிணற்றுக்குள் வாழவில்லை. வடவேங்கடம் தென்குமரியை உடைத்துக்கொண்டு, பூமிப்பந்தையும் கடந்து சந்திரன் செய்வாய் என்று சென்று வாழும் நிலையில் இருக்கிறான். அவனது இன்றைய தேவைக்கேற்ப தமிழும் அவனுக்கு முன்சென்று பறக்கிறது. இது இனிப்பான ஒன்றல்லவா? ஏன் துக்கம்?

தமிழ் தமிழனின் அன்றாட பயன்பாட்டில் இல்லாதுபோனால்தான் எனக்குத் துக்கம் வரும். தமிழில் இதெல்லாம் சொல்லமுடியாது அதெல்லாம் செய்யமுடியாது என்று சொல்லும் தமிழனை நான் வெறுக்கிறேன். எதுவும் முடியும், தமிழ் எப்படியும் வளையும் என்று சொல்லுவோரால்தான் தமிழ் வாழும் வளரும்.

நான் ஊசுடன் என்று எழுதுவதைவிட ஹூஸ்டன் என்று எழுதுவதையே விரும்புகிறேன். அப்படி விரும்பும்போது நான் நற்றமிழுக்கு ஏதும் இழுக்கினைச் செய்துவிடவில்லை.

புழங்குதமிழே நற்றமிழ். புழங்கப்படாத தமிழ் அழியும் தமிழ்.

இன்றைய புழக்கத்தில் தமிழ்ச்சொற்களைக் கொண்டுவந்து சேர்ப்போர் நல்ல தமிழர்கள் என்று கொள்வேன். அதே சமயம் இன்றைய அறிவியல் தேவைகளையும் உலகத் தொடர்பு உரையாடல்களையும் கருத்தில் கொண்டு தனித்தமிழ்ப் பிடிகளைத் தளர்த்துவதே சிறப்பு என்றே கருதுகிறேன்.

தமிழில் உரையாடி தமிழில் எழுதி தமிழை வாழ்மொழியாக்கிக் காப்பதே தமிழினத்திற்கான முதல் தேவை!

வடமொழிச்சொற்கள் மட்டுமின்றி உலகின் பல பகுதியில் உள்ள சொற்கள் தமிழில் வந்து கலந்துள்ளன.

இன்று ஏதும் புதிதாய் வடமொழிச் சொற்கள் வந்து சேரவில்லை. அவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்துசேர்ந்துவிட்டன. ஆனால் அது தமிழை அழிக்கும் ஈன எண்ணத்தோடு செய்யப்பட்டவை.

ஆகவே தமிழறிஞர்கள் தமிழை மீட்டெடுக்கத் தமிழ்ப்புரட்சி செய்தார்கள். மீண்டும் தமிழை உயர்த்திப் பிடித்தார்கள். இதன் பொருள் இனி ஒரு புதுச் சொல்லும் வேறு மொழியிலிருந்து தமிழுக்குள் வந்துவிடக்கூடாது என்பதல்ல. தமிழை அழிக்கும் முகமான எதுவும் இனி நிகழக்கூடாது என்பதே.

இன்றைய காலகட்டத்தில் தமிங்கிலம் வந்து தமிழுக்குள் குதியோ குதியென்று குதிக்கிறது. அதனை எதிர்த்தே நாம் போராடவேண்டும். அதைவிட்டுவிட்டு கிரந்தம் அழிப்பு தனித்தமிழ் ஒன்றே தமிழ் என்று கூறுவது போன்றவை நம்மை நாமே முடக்கிக்கொள்வது.

ஆங்கிலம் தமிழை மட்டும் தாக்கவில்லை. உலக மொழிகள் அனைத்தையும் தாக்குகின்றது. இந்தி பேசுவோர் நம்மைவிட மிக அதிகமாக ஆங்கிலம் கலந்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இப்படியே சைனா, ஜப்பான், கொரியா என்று பல நாட்டு மொழிகளும். உலகில் இன்று ஆங்கிலச் சொற்களைக் கலக்காமல் பேசுவோர் மிகக் குறைவு.

இன்றைய நாட்களில் மனித இனங்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று கலந்து ஒட்டு இனங்களாய் நிற்கின்றவோ அப்படியே மொழிகளும் நிற்கின்றன. கனடாவின் டொராண்டோ நகரம் வந்தீர்களென்றால், எங்கும் கலப்பு எதிலும் கலப்பு என்பதுபோல், தமிழ்ப்பெண் ஆஃப்கானிஸ்தான் பையனை மணக்கிறாள். சைனாக்காரன் ஜெர்மானியப் பெண்ணை மணக்கிறான். கறுப்பர் வெள்ளையரை. வெள்ளையர் மஞ்சள் இனத்தவரை என்று மனித இனங்கள் பிணைந்து நிற்கின்றன.

இவர்களெல்லாம் அந்த ஊரின் வட்டார மொழியே தம் புழங்குமொழியாய்க் கொள்கின்றனர். அது வேறென்ன ஆங்கிலம்தான்.

இதில் ஒரு தமிழ்ப்பெண் ஜார்ஜ் புஷ் என்ற ஆங்கில இளைஞனை மணந்தபின், சார்சு பூழ்சு என்று அழைத்தால் என்னாகும்? அதைப்போலவே ஒரு வெள்ளைக்காரன் காத்தாயியை மணந்தபின், ’கேட்டாய்’ என்றால் என்னாகும்?

இளையவர்கள் நிறையவே வளைகிறார்கள். எல்லாவற்றையும் நேசிக்கிறார்கள். தன்னையும் தன் மொழியையும் நேசிப்பதுபோலவே பிறரையும் பிற மொழிகளையும் நேசிக்கிறார்கள்.

கிலோ மீட்டர், லிட்டர் போன்ற சொற்களை எல்லாம் தமிழாக்கவேண்டும் என்று நினைப்பது தேவையா? அதேபோல கணினி, இணையம், யுனித்தமிழ் போன்ற சொற்களைப் புழங்காமல் இருப்பது சரியா?

தமிழன் வேற்று மொழிப் பெண்ணை மணந்தாலும் தமிழை விடக்கூடாது. அப்பெண்ணின் மொழியை அறிந்துகொண்டு அதையும் பேசவேண்டும். அவளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்து அவள் தமிழையும் பேசவேண்டும். இரண்டு மொழிகளும் பிள்ளைகளின் மொழியாக வேண்டும். அதுதான் சிறப்பு. ஒரு மொழி அழியாமல் காக்கும் பண்பாடு. அந்தப் பண்பாட்டை வளர்க்கப் பாடுபடுவோம். அது தமிழின் தேவைமட்டுமல்ல உலக மொழிகளின் தேவை.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் எளிய வழிகளில் தமிழை உள்ளிழுத்துக்கொள்ள என்ன வழியென்று கண்டு அதனைச் செம்மையாக வளர்ப்போம்.

’என்னம்மா குஷ்புவை குசுபூங்கிற’ என்று மகள் கேட்டுச் சிரிக்காதவாறு தமிழ் வளர்ப்போம். குஷ்பு என்பதென்ன தமிழ்ச்சொல்லா, வெறும் பெயர்ச் சொல்தானே? அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே. இதனால் நற்றமிழ் எப்படி கெடும்?

வேட்டி என்பதை வேஷ்டி என்று கூறினால் நாம் திருத்துவோம். கனவு என்பதை ட்ரீம் என்று எழுதினால் வசைபாடுவோம். அப்படிச் செய்வதுதான் நற்றமிழுக்கு இழுக்கு.

பெயர்ச்சொற்களை அதனதன் வழியில் இயன்றவரை உச்சரிக்க முயல்வதில் தமிழ் ஒருக்காலும் கலப்படத்தமிழாய் ஆகிவிடாது.

புகாரி என்று எழுதி Buhari என்று வாசிக்கிறோம். பாரதி என்று எழுதி Bharathi என்று வாசிக்கிறோம். இதனால் தமிழ் அழிந்துவிடுமா?

சாருசு பூழ்சு என்று எழுதி அதை ஜார்ஜ் புஷ் என்று வாசிக்க முடிந்தால் அப்படி எழுதுவதில் ஏதும் குழப்பம் இல்லைதான். ஆனால் அப்படி வாசிக்கமுடியுமா? முடியும் என்றால் அது வெற்று விவாதமாகவே ஆகும்.

உடனே, அழகிய தமிழ் எழுத்துக்கிடையில் உள்ள ஐந்து கிரந்தங்களை அழிக்கிறேன் பார் என்று கூறிக்கொண்டு தமிழ் எழுத்தின் இங்கும் அங்கும் கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதும் ஆப்பிரிக்க இன அடையாளக் கோடுகள் கிழிப்பதும் அருவருப்பைத் தருகிறது. அதற்குப் பதிலாக கிரந்தம் தவிர்ப்போம் என்று கூறுவதுதான் சரி.

கிரந்தம் தவிர்ப்பது என்றால் என்ன? புகாரி என்பதை புஹாரி என்று எழுதாமல், ஆனால் ஜார்ஜ் என்பதை சாருசு என்றும் எழுதாமல் நற்றமிழ் எழுதுவது.

அதாவது அவசியம் இல்லாமல் பெயர்ச் சொற்களிலும் கிரந்தம் இடாமல் இருக்க உறுதி கொள்வது. இயன்றவரை உச்சரிப்பை முதன்மையாகக்கொண்டு பெயர்ச்சொற்களை அமைப்பது.

அன்புடன் புகாரி

Advertisements
 
 

Tags: , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: