RSS

வானத்திலிருந்து குதித்ததா சி.பி.ஐ. – 2

20 Jan
ருஷி மற்றும் ஹேம்ராஜின் இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் — ஆனால் சந்தேகத்தின் நிழலை டாக்டர் ராஜேஷ் தல்வாரின் மீது  சாய்த்துவிட்டு — வழக்கை மூட முனையும் சி.பி.ஐ.யிடம், ‘வழக்கை மூட ஏன் இந்த அவசரம்’ என வினவிய காஜியாபாத் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்ற மாஜிஸ்திரேட் ப்ரீதி சிங், இம்மாதம் (ஜனுவரி) 21 ஆம் தேதிவரை இதன் மீதான விசாரணையை ஒத்திவைத்து, வழக்கை மூடும் அறிக்கை உட்பட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆருஷியின் பெற்றோருக்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆறாம் தேதி ஆருஷியின் நண்பர்களும் உறவினர்களும் மத்திய டில்லியின் ஜந்தர்மந்தர் முன் ஆருஷியின் கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி, மறுவிசாரணை கோரியுள்ளனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் Polygraph, Narco Analysis, Brain maping என விதம் விதமான உண்மை கண்டறியும் சோதனைகள்  நடத்தப்பட்ட பின்னரும் உண்மையான குற்றவாளி அல்லது குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் சி.பி.ஐ. வழக்கைக் கை கழுவுகின்றது எனில், சி.பி.ஐ. என்ற மாயை தகர்கிறது என்றுதான் பொருள். இப்படித்தான் ஸிஸ்டர் அபயா கொலை வழக்கிலும் சி.பி.ஐ. கை கழுவ முனைந்தது.

கோட்டயத்தில் இருக்கும் ‘பயஸ் 10 கான்வெண்’டில் தங்கியிருந்த, கோட்டயம் பி.சி.எம். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ப்ரிடிகிரி வகுப்பு மாணவியான கன்னியாஸ்திரி அபயா, 1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் நாள் திடீரெனக் காணாமல் போனார். கோட்டயம் மேற்கு காவல் நிலையத்தில் “காணவில்லை” என வழக்குப் பதிவு செய்தனர். தேடுதலின்போது அக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் வி.வி. அகஸ்டின் முன்னிலையில் அந்தக் கான்வெண்டின் காம்பவுண்டுக்குள் இருக்கும் கிணற்றில் இருந்து, 19 வயதேயான அபயாவின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டது. கோட்டயம்  மருத்துவக் கல்லூரியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்பவர் பிணப்பரிசோதனை நடத்தினார். அபயாவின் மரணம் தற்கொலை என முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

ஆனால் மார்ச் மாதம் 31ஆம் தேதி அமைக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டக்குழு, கேரள மாநில முதல்வர், இந்தியப் பிரதமர், ஜனாதிபதி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, காவல்துறைத் தலைவர் என அனைவருக்கும் இவ்வழக்கைச் சரியான முறையில் விசாரிக்கும் படி, கோரிக்கை வைத்தது. 1992 ஏப்ரல் மாதம், 7 ஆம் நாள் வழக்கு கேரளக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சி.பி.சி.ஐ.டி.) மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.யும் தனது விரிவான புலன் விசாரணையின் முடிவில் “அபயா தற்கொலை செய்து கொண்டதாக” 1993 ஆம் ஆண்டு  ஜனுவரி 30 ஆம் நாள் வழக்கை முடித்தது. பொதுமக்கள் போராட்டத்தாலும் மக்கள் குழு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்ததாலும் கேரள அரசு சி.பி.ஐ. விசாரணையைக் கோரியது.

29.3.1993ஆம் நாள் விசாரணையைத் துவங்கிய சி.பி.ஐ. துணைக் கண்காணிப்பாளர் வர்கீஸ் பி தாமஸ் ஒன்பது மாதங்களில் 30.12.1993 அன்று “வேலை வேண்டாம்” என ராஜினாமாச் செய்து விட்டார். இன்னும் ஏழாண்டுகள் பதவிக் காலமும் பதவி உயர்வும் காத்திருந்த நிலையில் வேலை வேண்டாம் என உதறித் தள்ளிய அவர், “அபயாவின் மரணம் தற்கொலையன்று; கொடூரமான கொலையே எனக் கண்டுபிடித்துத் தாம் எழுதிய அறிக்கையைத் திருத்தித் ‘தற்கொலை’ என எழுதும்படி தம் மேலதிகாரியான கண்காணிப்பாளர் தியாகராஜன் நெருக்கடி கொடுத்ததால் தாம் மனசாட்சிக்குத் துரோகம் இழைக்க விரும்பாமல் பதவி விலகுவதாக” 19.1.1994 அன்று பத்திரிக்கையாளர்களைக் கூட்டிப் பகிரங்க அறிவிப்பும் செய்தார்!

காவல் துறையில் சிறப்பாகப் பணி புரிந்தமைக்காகக் குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்ற அதிகாரி வர்கீஸ், “அபயா வழக்கு மறைக்கப்பட்ட உண்மைகள்” என ஒரு வார இதழில் அவர் தொடராக எழுதி வந்த கட்டுரையையும் நான் படித்துள்ளேன்.

வர்கீஸின் வெளிப்படையான அறிவிப்புக்குப் பின், அவ்வாண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் கேரளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சி.பி.ஐ. இயக்குநர் கே.விஜய ராமராஜுவைச் சந்தித்து, அபயா வழக்கில் தியாகராஜன் மேலும் தொடர அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கை மனு அளித்தனர். அதனால் சி.பி.ஐ. இணை இயக்குநர் எம்.எல். ஷர்மா, அபயா வழக்கு விசாரணைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ஆனால் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. எனவே மக்கள் குழு, கொச்சி சி.பி.ஐ. அலுவலகத்தின் முன்னால் 2/11/95 அன்று தர்ணா போராட்டம் நடத்தியது. முன்னாள் முதல்வர் ஈ.கே. நாயனார் தலைமையில் 18/03/96 அன்று தலைமைச் செயலகத்தின் முன் பிரம்மாண்ட பேரணியும் நடத்தினர். 1/7/96 இல் சி.பி.ஐ.யின் செயலற்ற தன்மையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது மக்கள் போரட்டக்குழு. 20/8/96 அன்று மூன்று மாதத்துக்குள் விசாரணையை முடிக்கும்படி நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. 12.10.1996 அன்று பிரதமரைச் சந்தித்த கேரள எம்.பி.க்கள் அபயாவழக்கு விசாரணையை விரைந்து முடிக்கத் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். 6.12.1996 அன்று எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நீதிபதி (சி.ஜே.எம்.) முன் இவ்வழக்கை மூடுவதற்கு அனுமதி கேட்டு மனுச் செய்தது சி.பி.ஐ. இதற்கு எதிராக அபயாவின் தந்தை மனுச்செய்தார். 20/03/97 அன்று சி.ஜே.எம். இவ்வழக்கை மறு விசாரணை செய்யும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார்.

பதிவு நீண்டு விடும் என்பதோடு படிக்கும் வாசகர்களுக்கும் சலிப்பு ஏற்பட்டுவிடும் அளவுக்கு மூன்று முறை சி.பி.ஐ. இவ்வழக்கை முடித்துக் கொள்ள முயன்றதையும் நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டதையும் விவரித்து எழுதவில்லை. இறுதியாக அமைக்கப்பட்ட சி.பி.ஐ.யின் ஐந்தாவது குழு தன் விசாரணையின் முடிவில், அபயாவைக் கொலை செய்ததற்காக ஃபாதர் தாமஸ் கோட்டூர், ஃபாதர் ஜோஸ் புத்ரகயில் மற்றும் ஸிஸ்டர் ஸிஃபி ஆகியோரை 2008 நவம்பர் 19ஆம் தேதி கைது செய்தது. அடுத்த வாரமே அபயா வழக்கை முதன் முதலாக விசாரித்த கோட்டயம் மேற்குக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வி.வி. அகஸ்டின் தற்கொலை செய்து கொண்டார். அபயாவின் கொலையை மறைப்பதற்காகத் தடயங்களை அழித்ததாக அவர் மீது சி.பி.ஐ. குற்றம் சுமத்தி இருந்தது. சி.பி.ஐ. தம்மைச் சித்திரவதை செய்ததாக அகஸ்டினின் தற்கொலைக் கடிதம் சொன்னது.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட Polygraph, Narco Analysis, Brain maping சோதனைகளின் அடிப்படையில் தாமஸ் கோட்டூர் முதல் குற்றவாளியாகவும்  ஜோஸ் புதரகயில் இரண்டாம் குற்றவாளியாகவும் ஸிஃபி மூன்றாம் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். அபயா தாம் தங்கியிருந்த கான்வெண்டில் சம்பவ இரவில் “அந்தரங்கமான நிலையில் இம்மூவரும் இருந்ததை”க் கண்டதாகவும் விஷயம் வெளியே தெரிந்து விடாமல் இருக்க இம்மூவரும் சேர்ந்து அபயாவைக் கொன்றதாகவும் இ.பி.கோ. 302 (கொலை) மற்றும் 201 (தடயங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. இம்மூவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த (13/01/2011) வியாழனன்று நீதிமன்றத்தில் மூவருக்கும் குற்றச்சாட்டு படித்துக் காட்டப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகள் தாம் குற்றமற்றவர்கள் எனவும் தங்களிடம் நடத்தப்பட்ட Polygraph, Narco Analysis, Brain maping சோதனைகளின் சிடியில் சேர்த்தல் நீக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் நம்பகத்தன்மை இல்லை எனவும் தங்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் மனுச் செய்துள்ளனர். (இந்த சிடி விவகாரமும்  கேரளத்தைப் பரபரப்பாக்கியது. உச்ச நீதிமன்ற முன்னாள தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மீது கடந்த வாரம் அபயாவின் தந்தை இது தொடர்பாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.)

நீதிமன்றம் தம் கடமையைச் செய்யட்டும். ஒரு மரணத்தைக் கொலையா தற்கொலையா என முடிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு சி.பி.ஐ.க்குப் பதினாறு ஆண்டுகள் ஆயின என்பதையும் வழக்கை முடிக்க முடியாமல் மூன்று முறை சி.பி.ஐ. வழக்கை மூட முயன்றதையும் ஆருஷி வழக்கையும் போஃபர்ஸ் வழக்கையும் மூடத் துடிப்பதையும் பார்க்கும்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு முறை அன்றைய முதல்வர் ஜெயலலிதா எழுப்பிய வினாவே நினைவுக்கு வருகின்றது.

அந்தப் புகழ் பெற்ற வினா:-

“சி.பி.ஐ. என்ன வானத்திலிருந்தா குதித்தது?”

(ரஸ்ஸலின் அனைத்து அதிரடி அலசல்களையும் இங்கு காணலாம்)
Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: