RSS

சினிமா சாக்கடையிலிருந்து தமிழன் மீள்வானா?

06 Feb

 

எனக்கு எதிராக பில்லி சூனியம் வைத்துள்ளார்கள் என்கிறாரே எடியூரப்பா? அதெல்லாம் உண்மையிலேயே உண்டா? -கண்ணன்,மருதூர்.

பில்லி சூனியம் எல்லாம் கிடையாது என்பதே வணங்காமுடியின் கருத்து.
சில மதநம்பிக்கைகளின் அடிப்படையில் பீஜேபி கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா அதை நம்புகிறார். அப்படி அவர் உண்மையிலேயே நம்புவதாக இருந்தால் அதே வழியைப் பின்பற்றித் தம் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளலாமே?
பரிகாரம் என்ற பெயரில் நிர்வாணமாக உறங்குவதும் கழுதைகளைப் பலியிடுவதும் நல்ல காமெடி.
விட்டலாச்சாரியா படங்களில் வருவது போன்று கொடூரத் தோற்றமுடைய மந்திரவாதிகளை ‘விதான்செளதா’வில் அரசவை மந்திரவாதிகளாக நியமிக்காமல் இருந்தால் சரி!

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப் பணம் பற்றி விவரங்களை அறிய நாம் 2012 வரை காத்திருக்க வேண்டுமாமே, ஏன்? – சங்கீதா, சென்னை.
உள்ளூரில் ஓர் அரசு அலுவலகத்தில் நாம் கொடுத்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என அறிவதற்கே நாம் காத்துக்கிடக்க வேண்டிய நடைமுறை உள்ள நாட்டில், வெளிநாடு தொடர்பான செய்திகளைப் பெறுவதற்கு 2012 வரை காத்திருக்க வேண்டும் என்பதில் வியப்பில்லை.

‘ரெட் டேப்பிஸம்’ என்ற ஒரு ‘ஸ்பீட் பிரேக்கர்’ அரசு நடைமுறையில் உண்டு என்பதை உனராதோர் இந்தியர்களா என்ன?

வ.மு. பயணம் செய்த நாடுகளில் அவருக்குப் பிடித்த நாடு எது? ஏன்? – ராகவன், குவைத்.

நான் அதிகம் வெளிநாடுகளைப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றவனல்லன்.

 

யூ ஏ இ நாட்டையும் பகரின் நாட்டையும் பார்த்துள்ளேன். துபாய் அபுதாபி நகரங்களின் வளர்ச்சியையும் புதுமையையும் பார்த்து வியந்துள்ளேன்.

 

ஆனால் நான் ரசித்ததும் அனுபவித்ததும் மீண்டும் செல்ல விரும்புவதும் பசுமை பூத்த இலங்கைத் தீவுக்குத்தான்.

 

மலையும் காடும் நதியும் கடலும் என அமைந்த அற்புதமான இடம்…கிட்டத்தட்ட என் ஊரைப்போலப் பசுமையும் கால நிலையும் இருப்பதாலோ என்னவோ எனக்கு இலங்கை பிடித்துப்போய்விட்டது.

 


இந்தியாவில் தோன்றிய புத்தமதம், இலங்கையில் ஆட்சி மதமாகவும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மிகப் பரவலாகவும் பின்பற்றப்படும் நிலையில் இந்தியாவில் அவ்வாறு ஒரு மதம் இருப்பதற்கான அறிகுறியே காணமுடியவில்லையே ஏன்? – மகேஷ், நாகர்கோவில்.

ஆட்சிதான்.

 

தமிழகத்தில் சைவ வைணவ சமயங்கள் மன்னர்களின் அரவணைப்பால் வளர்ந்தபோது இங்கிருந்த சமண பவுத்த சமயங்கள் நலிந்தன. பல சமண பவுத்த ஆலயங்களும் இந்துக்கோவில்களாக மாறின!

 

பல நாடுகளாக இருந்த இந்தியா முழுவதும் இதுவே நிலை.

 

வட ஆப்பிரிக்காவை அரேபிய முஸ்லிம்கள் கைப்பற்றியதும் அந்நாட்டுச் சமயங்கள் நலிந்ததோடு இஸ்லாம் அந்நாடுகளின் சமயமானதும் அரபு மொழியே அந்நாடுகளின் ஆட்சி மொழியானதும் நடந்தன. எகிப்து, லிபியா, சூடான், மொராகோ, அல்ஜீரியா, துனீஸியா போன்றவை சான்றுகள்.

 


“நண்பேன்டா” என்று எகிப்திய அதிபரிடம் கைகுலுக்கிக் கொண்டிருந்த மேற்குலக அதிபர்கள் மக்கள் எழுச்சியைக் கண்டதும் பல்டியடிக்கிறார்களே – இதுநாள்வரை அவர் ஜனநாயகவாதி என்று நம்பிக் கொண்டிருந்தார்களா? – ரஃபீக், அபுதாபி.

உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்யும் ஜனநாயக மொத்த வியாபாரி :–)   அமெரிக்காவுக்கு, ஹோஸ்னி முபாரக் ஜனநாயகவாதி இல்லை என நன்றாகத் தெரியும்.

எகிப்தில் உன்மையான ஜனநாயகம் மலர்ந்தால் அமெரிக்காவின் கள்ளக்குழந்தையான இஸ்ரேலுக்கு ஆபத்து என்பதால் இஸ்ரேலுக்கு ஆதரவான ஹோஸ்னி முபாரக்கைத் தாங்கிப் பிடிக்கிறது அமெரிக்கா!

இது வெறும் ஊகமில்லை.

பாலஸ்தீன மக்கள் ஜனநாயக அடிப்படையில் தேர்தலில் வெற்றிபெறச் செய்த ஹமாஸ் இயக்கத்தை ஆட்சிப் பொறுப்புக்கு வரவிடாமல் செய்த போதே அமெரிக்காவின் இரட்டை ஜனநாயக நிலை அம்பலத்துக்கு வந்துவிட்டது.

ஹோஸ்னி முபாரக் பதவி துறந்து நாட்டை விட்டு ஓடி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து எகிப்தில் ஜனநாயக மக்களாட்சி மலர்ந்தாலும் இஸ்ரேலை அங்கீகரிக்காதவரை எகிப்தின் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்க்கவே அமெரிக்கா பாடுபடும்.


அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியதை ஒத்துக்கொண்ட எடியூரப்பா, இன்னமும் முதல்வர் பதவியில் தொடர்வது ஜனநாயகத்தின் கையாலாகாதனத்தினாலா? அல்லது மக்களின் அறியாமையினாலா? – சேகர், மும்பை.

அரசு நிலத்தைக் குடிமக்களுக்கு ஒதுக்குவதில் எந்தத் தவறும் இல்லை.

அரசு நிலத்தைப் பெறும் தகுதி உடைய எவருக்கும் நிலம் கொடுக்கலாம். அத்தகுதி இல்லா ஒருவருக்கு  முறைகேடாக ஒதுக்கினாலே சிக்கல். சமீபத்தில் தமிழ்நாட்டில் வீட்டுவசதி வாரிய வீடுகள் ஒதுக்கீட்டிலும் மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீட்டிலும் நிகழ்ந்த முறைகேடுகள் வெளிவந்தனவே!

எடியூரப்பா முறைகேடு செய்திருந்தால் அந்நிலத்தைத் திரும்பப் பெற்றாலே போதுமே?

இதற்காகவெல்லாம் பதவி விலக வேண்டும் எனச் சொல்வது எதிர்க்கட்சிகளின் அரசியல் விளையாட்டே!


சுவிஸ் வங்கியில் பதுக்கியிருக்கும் பணம் குறித்த விவரங்களைத் தகவல் உரிமை அறியும் சட்டம் மூலம் பெற முடியுமா? – யாசர், சிதம்பரம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் நாம் இந்தியாவில் தகவல்களைப் பெறலாம்; சுவிஸ் நாட்டில் பெற முடியாது.

இந்தியாவில் இருக்கும் தகவல் ஆணையத்திற்கு நீங்கள் எழுதலாமே?

அவர்களால் பெற முடிந்தால் உங்களுக்கு உதவுவார்கள்.

லயோலா கல்லூரி சர்வே முடிவுகள் நம்பகமானவையா? – சக்கரவர்த்தி -துபாய்.

சர்வேக்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போலவோ வாக்காளர் சேர்க்கை போலவோ வீடு வீடாகச் சென்று நடத்தப்படுவதில்லை. ‘லாட்டரி மெதோட்’, ‘ராண்டம் ஸாம்பிள் மெதோட்’ போன்ற வழிகளில் நடத்தப்படுகின்றன.

எனவே அவை துல்லியமாக மக்கள் எண்ணைத்தைப் பிரதிபலிப்பன எனக் கொள்ள முடியாது.

பல சர்வேக்களின் முடிவுகள் உண்மை முடிவுகளுக்கு மாறாக அமைந்துள்ளன.


“தையல் சொல் கேளேல்” – ஒளவை

“தையலை உயர்வு செய்” – பாரதி

வ.மு இதில் எதை ஏற்கிறார்? – ராமமூர்த்தி, மதுரை.

இரண்டையும்தான்.

“தையலை உயர்வு செய்” என்பது பெண்களைப் போற்று என்பதாம்.

தாய் உடன்பிறந்தாள் மனைவி என எவ்வித வேறுபாடுமின்றிப் பெண்களை உரிய மதிப்புடன் நடத்துவது .

“தையல்சொல் கேளேல்” என்பது குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காம்.

மனைவிக்கு எதிராக மாமியாரும் நாத்தனாரும் சொல்வனவற்றையும் அவர்களுக்கு எதிராக மனைவி சொல்வனவற்றையும் கேளேல் என்பது பொருள். மற்றபடி பொருளாதார வளர்ச்சிக்கும் சிக்கனச் செலவிற்கும் தாயும் தாரமும் சொல்லும் பயனுள்ள அறிவுரைகளை ஏற்றுச் செயல்படுவது நன்று.

சினிமா சாக்கடையிலிருந்து தமிழன் எப்போது மீள்வான்? – நங்கை ஜெகதீசன்.எம்.ஜே.

சினிமா சாக்கடையில்லை ஸார். உலக அளவில் தரமும் தகுதியும் வாய்ந்த இலக்கியத் தரத்துடன் அமைந்த நல்ல திரைப்படங்கள் வெளிவருகின்றன.

தமிழிலும் அன்பே சிவம் , பருத்திவீரன் போன்ற பற்பல அரிய திரைக்காவியங்கள் வந்துள்ளன.

ஆனால் தமிழனுக்கு அடிதடி வன்முறை அரிவாள் வெடிகுண்டு ரத்தம் கார் சேஸிங் என மசாலாக் கலவை பிடித்திருப்பதால் நிறையப் படங்கள் சாக்கடையாகவே வருகின்றன.

அதிலிருந்து மீள முடியாத அளவு மூழ்கி விட்டவன் எப்போது மீள்வான் என எதிர்பார்ப்பது வீண்.

சினிமாவிலும் சின்னத்திரை ஸீரியல்களிலும் வாழ்வை அடகு வைத்துவிட்டுக் கற்பனை உலகத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தை மீளவிடாத அளவுக்குப் பிடித்துக் கொண்டன அவை.


பாமகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் திமுக பற்றி வ.முவின் கருத்து என்ன? – ராஜேஷ், மதுரை.

இப்பகுதியில் முன்னர் ஒரு வினாவுக்கு , பா ம க , தி மு க அணியில் இடம்பெறும் என விடையளித்துளேன். தி மு க அணியில் போட்டியிடக் கிடைக்கும் இடங்கள் குறைந்தாலும் கூட்டணிக் கட்சிக்குரிய மரியாதை இருக்கும். அ தி மு க அணியில் இடங்களும் குறைவதோடு மரியாதை அறவே கிடைக்காது என்பது ராமதாசுக்கு நன்றாகத் தெரியும்.

தி மு க அணியில் இடம் பெறுவதைத் தவிர பா ம க வுக்கு வேறு வழி இல்லை என்பதுதான் இவ்விடை எழுதும் வரை உள்ள நிலைமை.


காஷ்மீரில் கொடியேற்றும் போராட்டம் தேவையற்றது என்கிறாரே சத்ருஹன் சின்ஹா? – குமார், கல்லுமேடு.

‘ஷாட்கன்” பீகாரின் மண்ணின் மைந்தன். பீகார் முதல்வர் நிதீஷ் சொன்னதை அப்படியே ஷாட்கன் வழிமொழிந்துள்ளார்.

நம் தளத்தில் ரஸ்ஸலின் அலசலும் இதைப் பேசியுள்ளதே!

 


பார்ப்பனர்களின் அவசியமான உணவு என்பதால்தான் வெங்காயம் பருப்பு விலையுயர்வு அரசியலாக்கப்பட்டுள்ளது என்று கருஞ்சட்டை தோழர் ஒருவர் சொல்கிறார். இது சரியா வ.மு.அய்யா? – செந்தில் – கவுண்டன் பாளையம்.

சரியில்லை.

பார்ப்பனர்கள் மட்டுமா வெங்காயத்தையும் பருப்பையும் உண்கிறார்கள்?

பார்ப்பனர்கள் வெங்காயத்தையும் பருப்பையும் உண்ட காலம் மலையேறிவிட்டது. இன்று அசைவ உணவையும் ஒரு கை பார்ப்பவர்களை வணங்காமுடிக்குத் தெரியும்.

வெங்காயமும் பருப்பும் சாம்பாருக்குத் தேவை. தமிழனின் அன்றாட உணவில் அவை இடம் பெறா நாளே இல்லை.

அசைவ உணவுக்கு வெங்காயம் கட்டாயத் தேவை.

ஓர் இனத்தின் மீதுள்ள வெறுப்பால் சிலர் அவதூறு கூறுவது தமிழனின் பணபாட்டுக்கே எதிரானது.

 

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)

வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎன்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

Source : http://www.inneram.com/2011020513382/vanagamudi-answers-06-02-2011

Advertisements
 

Tags: , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: