RSS

நினைவாற்றலை வளர்ப்பதற்கு சில வழிமுறைகள் கூறுங்களேன்?

20 Feb

ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை தள்ளி விட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி வணங்காமுடியார் என்ன நினைக்கிறீர்கள்? -அமுதா, திருவனந்தபுரம்.

நாள்தோறும் படிக்கும் செய்திகளுள் அதுவும் ஒரு செய்தி!

ரயில்கள் மோதல்; பயணிகள் மரணம், ரயிலிலிருந்து கீழே விழுந்து பெண் சாவு, பாலம் இடிந்து ரயில் கவிழ்ந்து பயணிகள் பலி போல ஒரு செய்தி.

ரயில் பயணம் தனியாகச் செல்லும் பயணிகளுக்குப் பாதுகாப்பானதில்லை எனும் உண்மையைச் சொல்லும் ஒரு செய்தி.

ஆனால் வ மு விடைகள் பகுதியில் சொல்ல வேண்டியது வேறு.

இந்தியாவின் பெரு/சிறு நகரங்கள் கிராமங்கள் உட்படப் பல்வேறிடங்களில் பரவலாக நடைபெறும் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்களையும் வன்புணர்ச்சியையும்  கூட்டு வல்லுறவுகளையும் பற்றி மக்கள் இன்னும் விழிப்புணர்வின்றி இருக்கின்றனர் என்பதையே!

நமக்கு அண்மையில் அல்லது நாம் வாழும் இடத்தைச் சுற்றியுள்ள இடங்களில் இப்படி ஏதாவது ஒன்று நடந்து விட்டால் அதுபற்றிப் பரபரப்பாகப் பேசுவதும் வருத்தப்படுவதும் இப்படி ஏதேனும் பத்திரிகையில் வினா எழுப்புவதும் மட்டுமே செய்கிறோம்.. பள்ளியில் தீ பிடித்துக் குழந்தைகள் இறந்தாலோ அல்லது குழந்தைகள் கடத்தப்பட்டாலோ அரசு உடனடியாகச் சில நடவடிக்கைகள் எடுப்பதைப்போல.

உலக நாடுகளில் புகார் பதியப்பட்டட வன்புணர்ச்சிக் குற்றங்களில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ள  இந்தியாவில், அறுபத்தொன்பதுக்கு ஒன்று மட்டும் என்ற கணக்கில்தான்  வன்புணர்ச்சிகளில் புகார் பதிவாகிறது. பதியப்பட்ட வழக்குகளில் 20 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது. சாதிச் சண்டை அல்லது ரெளடிகள் மோதல் போன்றவற்றில் நிகழும் வன்புணர்ச்சிகள் அல்லாது  சாதாரண பாலியல் தொந்தரவுகளையும் வன்புணர்ச்சிகளையும் ஊடகங்கள் கூடக் கண்டுகொள்வதில்லை என்பதுதான் நிலை.

உங்கள் வினாவில் கூட ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதுதான் முதன்மை பெறுகிறது.


“துணை அதிபர் உமர் சுலைமானை எகிப்தின் அதிபராக்க வேண்டும்” என்று குரல் கொடுக்கும் இஸ்ரேலுடைய அமெரிக்காவுடைய ஆசையின் பின்னணியில் இருப்பது என்ன? – வசீகரன், கோவை.
அமெரிக்காவின் கள்ளக் குழந்தையின் நலனன்றி வேறென்ன? முன்னர் இது பற்றி வேறொரு விடையில் கூறப்பட்டுள்ளதையும் காண்க!

‘வழுக்கி விழுந்தவர்கள்’இல் ஆண்கள் இல்லையே ஏன்? – G. கோகுல், வடபழனி.

வன்புணர்ச்சிக்குப் பலியோவோரில் பத்து விழுக்காடு ஆண்கள் என ஒரு புள்ளிவிபரம் தகவல் தருகிறது. இதுவே ஊடகங்களுக்குச் செய்தி ஆகாதபோது வழுக்கி விழும் ஆண்களைப் பற்றி யார் செய்தி தருவார். அதனால்தான் வழுக்கி விழுந்தவர்களில் ஆண்கள் இல்லையே என்ற வினா எழுந்துள்ளது.
பீடி விளம்பரத்துக்கும் டயர் விளம்பரத்துக்கும் கூடப் பெண்களைக் காட்டுகின்றனர்…விளம்பர ஈர்ப்புக்காக! பெண் வழுக்கி விழுந்தால்தான் செய்தி பரபரப்பாகும்.

ஏனெனில் ஆண்கெட்டால் சம்பவம்;பெண் கெட்டால் சரித்திரம் என்பது இந்தியாவில் எழுதப்படாத நீதி.


தேர்தல் அரசியலில் நுழையும் முன் திருமாவிடம் இருந்த கம்பீரம் குறைந்தது போல் உள்ளதே இப்போது?- பாபு, வேலூர்.

ஒரு அலுவலகத்தில் அல்லது நிறுவனத்தில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தன்னார்வத்தில் வேலை செய்யும் ஒருவரிடம் கம்பீரம் இருக்கும். பிறரும் அவரை மதிப்பர். அவரே சம்பளம் வாங்கும் ஊழியராகிவிட்டால் முதலாளியின் விருப்பு வெறுப்புக்கேற்ப வளைந்து கொடுத்து அனுசரித்துப் போக நேரிடும். அரசியலிலும் இதுதான் நிலை.. ஓட்டும் சீட்டும் கேட்டு நிற்கும்போது பெரிய கட்சிகளிடம் கூனிக் குறுகி நிற்கவேண்டிய நிலை தவிர்க்க முடியாதது. அதனால் கம்பீரம் தானே குறைந்து விடும்.


நினைவாற்றலை வளர்ப்பதற்கு சில வழிமுறைகள் கூறுங்களேன்? – கீதா, மஸ்கட்.

நினைவாற்றலை வளர்ப்பதற்கு என மருந்து ஒன்றும் இல்லை. சந்திக்கும் ஆள்கள், உரையாடல், இடம், நமக்கு வரும் கடிதங்கள், மின்னஞ்சல்கள், அவற்றிற்கு நாம் எழுதும் மறுமொழிகள், படிக்கும் நூற்கள், கட்டுரைகள், கவிதைகள் கொடுக்கல் வாங்கல்கள், வியாபார விஷயங்கள் என எண்ணற்ற தகவல்களை மூளை பதிவு செய்து வைத்துக் கொண்டு எத்தனை ஆண்டுகளானாலும் எடுத்துத் தரும். என்ன ஒன்று, அனைத்திலும் ஸின்ஸியாரிட்டி இருக்க வேண்டும். உளமார்ந்து ஈடுபட்டால் அதுவே சிறந்த பயிற்சி.

பெண்களுக்கு ஆண்களை விட நினைவாற்றல் அதிகம். குறைந்தது மூன்று சானல்களில் டி வி தொடர்களை நாள்தோறும் பார்க்கும் அவர்கள் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களையும் அவற்றிற்கிடையேயான உறவுகளயும் உறவுச் சிக்கல்களையும் உரையாடல்களையும் கதையையும் நினைவில் கொண்டிருப்பதோடு, வெவ்வேறு தொடர்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களாக வருபவர்களையும் நினைவில் வைத்துக் கொண்டு குழப்பமில்லாமல் கதையைப் புரிந்து கொள்கிறார்களே! அந்த நினைவாற்றல் பாராட்டத் தக்கதில்லையா?


எகிப்தில் நடந்தது போன்றதொரு மக்கள் எழுச்சி இந்தியாவில் நடப்பதற்குச் சாத்தியம் உள்ளதா? – தமிழரசன், திண்டுக்கல்.

இல்லை!.

எகிப்தைப் போலின்றி இந்தியாவில்  பல மதங்களும் பலநூறு சாதிகளும் ஆயிரக் கணக்கில் அரசியல் கட்சிகளும்  இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழ / ஆள மதசார்பற்ற நாடாளுமன்ற மக்களாட்சி முறை நடக்கிறது.

எகிப்தில் அல்லது அதைப்போன்ற வட ஆப்பிரிக்க முஸ்லிம் நாடுகளில் இந்த நிலை இல்லை. ஒரே ஆள் ஆண்டுக் கணக்கில் ஆளும் சர்வாதிகாரமே நடக்கிறது. உலக நாடுகளின் கண்ணை மறைக்கப் பெயரளவுக்குத் தேர்தல் நடந்தாலும் சர்வாதிகாரியே வெல்வார். மக்களின் குரல் முடக்கப்பட்டிருக்கும்.

அதனால்தான் அளவுக்கதிகமான காற்றடைக்கப்பட்ட பலூன் வெடிப்பதைப்போல் அந்நாடுகளில் மக்கள் எழுச்சி நடக்கிறது. உண்மையான மக்களாட்சி இந்தியாவில் நடப்பதால்…. ஆள்வோரை ஐந்தாண்டுகளில் மாற்றும் வாய்ப்பு நமக்கிருப்பதால் எகிப்து, துனீஸியா போல இங்கு வராது.


நாட்டில் நடந்த அநேக குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது ஆதாரப்பூர்வமாக வெளியான பின்னர்கூட, அரசு இதுவரை ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லையே, ஏன்? – அப்பாஸ், கீழக்கரை.

குண்டு வெடிப்புகளிலும் பயங்கரவாதச் செயல்களிலும் தொடர்பு படுத்துவதால் மட்டும் ஒரு அமைப்பைத் தடை செய்ய முடியாது. உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அமைப்பு என உளவுத்துறை கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் உள்துறை பரிசீலித்துத் தடைகள் விதிக்கப்படும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்  ஆர் எஸ் எஸ் தடைசெய்யப்பட்ட போது ஜமாத் இஸ்லாமும் தடை செய்யப்பட்டது. ஆனால் அந்த அமைப்பு, குண்டு வெடிப்புகளிலோ பயங்கரவாதத்திலோ ஈடுபடவில்லை.

எனவே அரசின் பார்வையில் சில அமைப்புகள் சில நூழ்நிலைகளில் சட்ட ஒழுங்குக்கும் சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிப்பன எனத் தெரிய வரும்போது தடை விதிக்கப்படும்.


நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க வழியே இல்லையா? – முருகன், சிங்கப்பூர்.

இருக்கிறது. அரசு முழு மனதுடன் முயன்றால் நடக்கும். அவர்களின் பிரச்சனைகள் என்ன எனப் பேச்சுவார்த்தை நடத்தி நாலில் இரண்டை நிறைவேற்றினால் மக்கள் ஆதரவு அரசுக்குக் கிடைக்கும்.

எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது தானே அடங்கும்.


கருணாநிதி விஞ்ஞான ஊழல்வாதி என்று ஜெயலலிதா கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்தென்ன? – இளங்கோ, மதுரை.

அது ஜெயலலிதாவின் சொந்தக் கருத்தன்று. நீதிபதி சர்க்காரியாவின் கருத்து.


இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம், இந்து தீவிரவாதம், நக்ஸல் தீவிரவாதம் – இம்மூன்றில் எது ஆபத்தானது? – ஜோஸஃப், நாகர்கோவில்.

பொதுவாகவே தீவிரவாதம் மிக ஆபத்தானது! அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகத்துக்குமே இன்று அச்சுறுத்தலாக உள்ளது.

இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக சமீபத்தில் இந்து தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட பின்னர், “தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது” என இந்துத்துவ தலைவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, தயவுசெய்து இவ்விஷயம் தொடர்பாக இந்துத்துவாவின் அறிக்கையினை ஏற்றுக்கொள்ளுங்கள்!


(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)

வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

Source : http://www.inneram.com/2011022013659/vanagamudi-answers-20-02-2011

Advertisements
 

Tags:

One response to “நினைவாற்றலை வளர்ப்பதற்கு சில வழிமுறைகள் கூறுங்களேன்?

  1. மதுரை சரவணன்

    February 20, 2011 at 11:53 pm

    அனைத்தும் அருமை.. வாழ்த்துக்கள்

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: