RSS

எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு?

28 Feb

மைக்ரோஸாஃப்டின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு எதிராக மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுவரும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இலவசமாக வெளியிடுகிறார்களே. எப்படி தாக்குபிடிக்கின்றனர்? -மயில்விழி, துபாய்.

பெருத்த வரவேற்பு என்பதெல்லாம் சாமானியர்களிடம் இல்லை. சாமானியர்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு இயங்கு தளம் எளிதாக இருக்க வேண்டும். அவ்வளவே. மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தின் மூலம் கெட்டபெயர் சம்பாதித்து இருந்தாலும், தனது அடுத்த வெளியீடான விண்டோஸ் ௭ மூலம் விட்ட இடத்தைப் பிடித்திருக்கிறது.

இனி உங்கள் கேள்விக்கு வருவோம். உண்மையில் இலவசம் என்று ஒன்று இல்லவே இல்லை. லினக்ஸ் இயங்குதளத்தைப் பொறுத்த மட்டில் பல்வேறு நிறுவனங்கள் அத்தளத்தின் திறமூல செயலியை மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இத்தளம் பெயரளவில் இலவசம் என்றாலும், அவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்க அதை வெளியிட்ட நிறுவனத்திற்குக் காசு கொடுத்தாக வேண்டும். இதை சாமானியருக்குப் புரியாத வகையில் பராமரிப்பு என்று அந்நிறுவனங்கள் அழைக்கின்றன.

இதன்மூலம் ஒருபுறம் திறமூலம் வளர்ச்சி அடைவதோடு அதனை வெளியிடும் நிறுவனங்களும் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளத் தேவையான வருவாயும் கிடைக்கிறது அல்லவா?


முபாரக்கிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தவுடனேயே அதுவரை அவருக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா அவருக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட ஆரம்பித்தது ஆச்சரியமாக இல்லையா? – ராஜ மாணிக்கம், திருவாரூர்.
இது முபாரக்கின் விஷயத்தில்  மட்டும் இல்லை. அமெரிக்கா தான் ஆதரிக்கும் பல நாட்டு அதிபர்களின் நிலை ஓரளவுக்குமேல் தாக்குப் பிடிக்காது எனத் தெரியவரும்போது இப்படித்தான் நடந்து கொள்ளும். இல்லையெனில் எகிப்து போன்ற நாடுகளுக்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்ய முடியாதே?

கடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 1000 லாரிகளில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக பொய் பரப்பிய பத்திரிக்கைகள் பற்றி? – சேட்- மதுரை.

சமூக அக்கறையோ பொறுப்போ இல்லாத, பரபரப்பை மட்டுமே காசாக்கத் துணியும் இழிந்த குணம் படைத்தோர் இதழாளர்களாக இருப்பது கவலையைத் தருகிறது. இல்லாத ஒன்றைச் செய்தியாக்கி மக்களைப் பீதியில் ஆழ்த்துவதோடு சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் கெடுக்க நினைக்கும் அற்பப் புத்தி படைத்தோர் செய்தியாளர்களிடையே ஊடுருவி உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.

புவி இயல் கூடத் தெரியாமல் “துபாயில் உள்ளது சவூதிஅரேபியாவின் தலைநகரம் ஜெட்டா” என்று செய்தி வெளியிடும் இவர்கள் இப்படித்தான் செய்திகளை வெளியிடுவார்கள். நாம்தாம் “பயிர் எது, பதர் எது” என அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.


இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிவாதிகள் காரணம் எனில் பாகிஸ்தானில் அண்மைக்காலமாக நடைபெறும் குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் யார்? – ஜெய்- சங்கரன்கோவில்.
பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதச் செயலுக்குப் பாகிஸ்தானியரே காரணம். அங்கு பல்வேறு அரசியல் மற்றும் மதக்குழுக்கள் செயல் பட்டு வருகின்றன.

அதுபோல் இந்தியாவில் நடக்கும் பயங்கரவாதச் செயலுக்கு இந்தியர்களே பொறுப்பு! அசிமானந்தாவும் ப்ரக்யாசிங் தாகூரும் பாகிஸ்தானிலா பயிற்சி பெற்றார்கள்?

ஆனால் அஜ்மல் கசாப் போன்ற பாகிஸ்தானியர் நேரடியாகவே நம் தாய்நாட்டிற்குள் நுழைந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதால், பாகிஸ்தானுக்கு எதிரான வாதம் வலுப்பெறுகிறது. மேலும் அங்கிருந்து வரும் ஊடுருவல்காரர்களாலும் பல பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன. இதைத் தடுப்பது பாகிஸ்தான் அரசு மற்றும் எல்லைப்பாதுகாப்புப் படையின் பொறுப்பாகும்.


அடுத்தடுத்து அமெரிக்காவின் பொம்மை அரசுகள் மக்கள் புரட்சி மூலம் தூக்கி எறியப்படுவது எதை உணர்த்துகிறது? – ராபட், மஸ்கட்.

அமெரிக்காவின் பொம்மை அரசுகள்?

அமெரிக்காவில் மக்களாட்சித் தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட  நிலையான அரசுகளே வந்துள்ளன. உங்கள் வினா அமெரிக்காவுக்கு ஆதரவாயிருந்த வட ஆப்பிரிக்க மற்றும் வளைகுடா முஸ்லிம் நாடுகளைப் பற்றியது என நினைக்கிறேன்.

துனீசியா அமெரிக்காவின் கைப்பாவை நாடாக இருந்தது இல்லை. துனீசிய அதிபராயிருந்த ஜைனுலாபெடின் பின் அலி  பிரான்ஸ் நாட்டு ஆள். லிபியாவின் கடாபியும்  அமெரிக்க ஆள் இல்லை. இப்போது புரட்சி நடந்த எகிப்து, மற்றும் மக்கள் கிளர்ந்தெழுகின்ற பஹ்ரைன், குவைத், ஜோர்டான், ஏமன் போன்றவை அமெரிக்காவின் தாளத்துக்கொப்பத் துள்ளுபவை. ஆனால் அந்நாடுகளின் மக்கள் எழுச்சி ‘அமெரிக்காவின்  கைப்பாவை அரசுகளை அகற்றுவது’  என்பதற்காக இல்லை; மாறாக, அடிப்படை உரிமைகளான உணவு, வேலை, கருத்துரிமை போன்றவற்றுக்காகவும் நீண்ட காலம் ஆளும் சர்வாதிகாரத்துக்கு எதிராகவுமே!

அமெரிக்கா ஆட்டுவிக்கும்  “பொம்மை அரசு” என்றால் ஆப்கானிஸ்தானின் கர்ஸாய் அரசைச் சொல்லலாம்.


ஈழத்தமிழர்களை அழிக்க இலங்கை ராணுவத்திற்கு உதவிய இந்திய அரசின் செயல் எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் தானே? – எழிலன், பாரிஸ்.

இல்லை.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது ஒரு நாடு மற்றொரு நாட்டுக்குள் தேவையின்றிக் குழப்பங்களையும் பயங்கரவாதச் செயல்களையும் நடத்துவது ஆகும். சான்றுக்கு மேற்சொன்ன வினா விடையைச் சொல்லலாம்.

அமெரிக்காவின்  ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொல்வது எல்லைதாண்டிய பயங்கரவாதம் ஆகும்.

இந்தியா இலங்கை அரசுக்கு ஆயுதம் மற்றும் போர்நுட்ப அறிவுரைகளை வழங்கியது எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகாது. இலங்கைக் கடற்படை நம்கடல் எல்லைக்குள் நுழைந்து நம் மீனவர்களைக் கொன்றால் அது எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகும்.


வணங்காமுடிக்கு பிடித்த தமிழ் நகைச்சுவை நடிகர் யார்? – அறந்தாங்கி ரமேஷ்.

விடை சொல்வேன்; எடிட்டர் வெட்டி விடுவார். வெட்டி விடுவதற்காக  ஒரு விடையை ஏன் வெட்டியாகச் சொல்ல வேண்டும்?

நீங்கள் புதிய வாசகராக இருக்க வேண்டும். சினிமா மற்றும் மதம் பற்றிய வினாக்களுக்கு வ மு விடைப்பகுதியில் தடை.


எகிப்து மக்களின் புரட்சி – ஈழ விஷயத்தில் தமிழர்களின் மௌனம் ஒப்புமை / வித்தியாசம்  படுத்த முடியுமா? – பாலகுமாரன், கேப்பார் குவாரி.

எகிப்து மக்கள் புரட்சி, “கத்தியின்றி ரத்தமின்றி” காந்தீய வழியில் நடந்தது. ராணுவம் மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடவில்லை.

ஈழப்போர் ஆயுதம் தாங்கி  நடந்தது. ராணுவம்  மக்களைக் கொன்றது.

தமிழர்களின் மெளனம் என்று நீங்கள் வினவியிருப்பது தமிழ்நாட்டைப் பற்றியா?

எனில் தமிழர்கள் மெளமாக இல்லை. தம்மாலியன்ற எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தனர், தனித்தனிக் குழுக்களாக. ஆனால் அது இந்திய அரசை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் திருப்பும் அளவு பலமானதாக இல்லாமல் போனது.


நடிகைகளைப் போல் நடிகர்கள் தற்கொலை செய்வதில்லையே ஏன்? – ராதிகா, கும்பகோணம்.

நடிகைகள் மட்டுமில்லை; பொதுவாகவே தற்கொலை எண்ணிக்கையில் பெண்கள் தாம் அதிகம். ஒரு புள்ளிவிபரத் தகவல்படி,  தற்கொலை செய்வதில் ஆண்களை விட நான்கு மடங்கு பெண்களின்  எண்ணிக்கை அதிகமாம். இதில் நடிகைகள் விதிவிலக்கா என்ன? அவர்களுக்கு விளம்பர வெளிச்சம் இருப்பதால் நீங்கள் வினவியுள்ளீர்கள்.


அரபுலகத்தில் நடைபெறும் அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்கள் மேலும் தொடருமா? – அன்வர் சாதத், சென்னை.

பல்வேறு நாடுகளில் தோன்றும் மக்கள் எழுச்சியைப் பார்த்தால் நம்பிக்கை வருகிறது.


கலைஞர் டிவி அலுவலக ரெய்டு காங்கிரஸ் அரசின் கண்துடைப்பு நாடகமா? – உதயன், கமுதி.

இல்லை. பின்னாளில் தி மு க வை(கருணநிதியை) மிரட்டக் காங்கிரஸுக்குக் கிடைத்த ஆயுதம்.


எதிர் வரும் தமிழக தேர்தலில் யாருக்கு அதாவது எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்? – குமரேசன், தஞ்சாவூர்.

தி மு க கூட்டணிக்கு!


 

எதிர் வரும் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் லீக், மமக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கு மக்களின் ஆதரவு இருக்குமா? – நூர் பாஷா, ஜாம்பஜார்.

மக்களின் ஆதரவு தனியாகத் தெரியாது; ஏனெனில் இவர்கள் இருக்கும் மெகா கூட்டணியின் தலைமைக் கட்சிகளே வெற்றிக்கு உரிமை  கொண்டாடும்.


(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)

வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎன்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்

Source : http://www.inneram.com/2011022713829/vanagamudi-answers-27-02-2011

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: