RSS

தாய்லாந்து தொடர் – 6

26 Mar

தாய்லாந்து ஒரு புத்த மத நாடு.

திரும்பிய பக்கமெல்லாம் புத்தர் கோயில்கள் தான்.

பிரமாண்டமான கோயில்களும் உண்டு. தம்மாத்தூண்டு கோயில்களும் உண்டு. வீடுகள், கடைகள் என்று எல்லா இடங்களிலும் சின்ன கோயில் மாதிரிகளை வைத்து கும்பிடுவார்கள்.

தாய்லாந்து அரசாங்கப் புள்ளி விபரம் ஒன்றின்படி நாட்டில் சுமார் 41,000 கோயில்கள் உள்ளன. புத்தர் கோயில்களைத் தவிர பள்ளிவாசல்கள், சர்ச்சுகள், இந்துக் கோயில்கள் தனி.

தலைநகர் பேங்காக்கில் புகழ் பெற்ற சீலோம் சாலையில் மஹாமாரியம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலைக் கட்டியவர் பெயர் வைத்தி செட்டியார். 1800களின் கடைசியில் கட்டப்பட்ட கோயில் இது. மாடு வியாபாரம் செய்து வந்த வைத்தி செட்டியார் அடிக்கடி ரங்கூனுக்கு சென்று வந்தார். அந்தக் காலத்தில் ரங்கூனில் செட்டியார் சமூகத்தினர் அதிகம். எனவே யாதவ சமூகத்தைச் சேர்ந்த வைத்தியையும் செட்டியார் ஆக்கிவிட்டார்கள் என்றுக் கேள்வி. ஒரு முறை ரங்கூனுக்குச் சென்று கொண்டிருந்த போது புயலடித்து கரை ஒதுங்கி பேங்காக் நகரின் மத்தியில் இந்தக் கோயிலைக் கட்டினாராம். இந்தக் கோயில் இருக்கும் ஒரு சாலையை ‘வைத்தி சாலை’ என்று அழைக்கிறார்கள். இவரது பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தான் இன்றும் இந்தக் கோயிலை நிர்வகிக்கிறார்கள். இவர்களுக்குத் தமிழ் தெரியாது. தமிழ்நாட்டிலிருந்து அர்ச்சகர்கள், நிர்வாகிகளை கொண்டு வந்து சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டு தோறும் நவராத்திரியின் போது நம்மூரிலிருந்து கலைஞர்களை அழைத்துச் சென்று திருவிழாக்கோலம் பூணுகிறது ஆலயம். கடைசி நாளன்று தேங்காய்த் திருவிழா கொண்டாடுகிறார்கள். தேர் உலா வரும் போது பல்லாயிரக்கணக்கான தேங்காய்களை உடைக்கிறார்கள். எப்போதும் பரபரப்பான சீலோம் சாலை அன்று ஒரு நாள் மட்டும் சுமார் 8 மணி நேரங்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மாரியம்மன் கோயிலில் நம்மூர் மக்களை விட தாய்லாந்து மக்கள் கூட்டம் தான் அதிகம்.

அதே போல தாய்லாந்தில் வசிக்கும் நம்மூர் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து தமிழ்ப் பள்ளி வாசல் ஒன்றையும் கட்டியிருக்கிறார்கள். இங்கு வாரந்தோறும் இலவசமாக தமிழ் மொழி எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கிறார்கள்.

இந்திய கலசாரத்தின் தாக்கம் தாய்லாந்தில் அதிகம் உண்டு. ஏற்கனவே ராமாயணம் அங்கே புகழ் வாய்ந்தது. இப்போது சமீப காலமாக தாய்லாந்து மக்களிடையே ‘பப்பி கணேஷ்’ புகழ் பெற்று வருகிறார். அதான் நம்மூர் பிள்ளையார்!

அதே போல பிரம்மாவும் தாய்லாந்து மக்களால் வணங்கப்படும் கடவுள்.

தலைநகர் பேங்காக்கில் பிரம்மாவுக்காக தனி ஆலயமே இருக்கிறது. Grand Hyatt Erawan Hotel என்ற நட்சத்திர தங்கும் விடுதிக்கு அருகில் படைத்தல் கடவுளாகிய ஆலயம் இருக்கிறது. ஆலயத்தின் பெயர் Erawan Shrine இந்த ஆலயம் 1955 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தாய்லாந்து நாட்டின் ஹோட்டல் மற்றும் சுற்றுலா நிறுவனம் 1943 ஆம் ஆண்டில் Erawan Hotel என்ற அரசாங்க ஹோட்டலை நிர்மாணிக்கும் பணி ஆரம்பித்த போது எதிர்பாராத விபத்துகள் நிறைய நிகழ்ந்ததாம். இந்த ஹோட்டல் 1955 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட போது Rear Admiral Luang Suwicharnpat என்ற சிறந்த வானசாஸ்திர நிபுணரின் அறிவுரைப்படி இந்துக்கள் வழிபடும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற முப்பெரும் கடவுட் கோட்பாட்டின் படி, படைத்தற்கடவுளாகிய பிரம்மாவின் கருணை வேண்டி Erawan Shrine என்ற இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இதைத் தவிர அனைத்து பெரிய கட்டிடங்களிலும் கூட பிரம்மாவின் சிறிய சிலையை வைத்து வணங்குகிறார்கள்.

கிராண்டு பேலஸ்…. தலைநகர் பேங்காக்கில் இருக்கிறது. 1782-ம் ஆண்டு முதலாம் ராமா மன்னரால் கட்டப்பட்டது. (தாய்லாந்தில் மன்னர்களை ராமா என்று தான் அழைக்கிறார்கள்). இவர் தான் பேங்காக் நகரை தாய்லாந்தின் தலைநகரமாக்கியவர். அப்போதிலிருந்து கடந்த 1946-ம் ஆண்டு வரை அரச குடும்பத்தினர் இந்த கிராண்டு பேலஸில் தான் வசித்து வந்தார்கள். இங்கே தான் புகழ் பெற்ற மரகத புத்தர் ஆலயம் உள்ளது. 45 செ.மீ. உயரம் கொண்ட இந்த பச்சை புத்தர் சிலையை மரகத புத்தர் என்று அழைத்தாலும், இது மரகதத்தில் செய்யப்பட்டதல்ல. ’ஜேடு’ என்ற பச்சைக் கல்லால் செய்யப்பட்டது. கி.மு. 43-ம் நூற்றாண்டில் இந்தியாவில் பாடலிபுத்திர நகரில் நகசேனா என்பவரால் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டதாம். அதற்கும் 300 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்தச் சிலை, 457-ம் ஆண்டில் பர்மிய மன்னரால் புத்த மதத்தை ரங்கூனில் பரப்புவதற்காக கேட்டுக் கொள்ளப்பட்டு இலங்கையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கப்பல் போன வழியில் புயல் அடித்து கம்போடியாவில் கரை ஒதுங்கி, அங்கே உள்ள உலகப் புகழ் பெற்ற அங்கோர் வாட் கோயிலில் வைக்கப்பட்டிருக்கிறது. 1432-ம் ஆண்டு தாய்லாந்து படையெடுத்து கம்போடியாவிலிருந்து இந்தச் சிலையை கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு! தாய்லாந்திலும் கூட பல ஊர்களுக்குப் பயணித்து கடைசியாக தான் இந்த கிராண்டு பேலஸில் வந்து அமர்ந்திருக்கிறார் மரகத புத்தர்.

இந்தக் கோயிலினுள் அரைக் கால் சட்டை எல்லாம் போட்டுக் கொண்டு நுழைய முடியாது. வெளியிலேயே துரத்தி விடுவார்கள்.

அடுத்து ‘வாட் போ’ எனும் சயன புத்தர் கோயிலும் தலைநகர் பேங்காக்கில் பார்க்க வேண்டிய ஆலயம்.

இதுவும் கூட முதலாம் ராமா மன்னரால் கட்டப்பட்ட ஆலயம் தான்!

இப்படி தாய்லாந்து முழுதும் பல ஆலயங்கள் இருக்கின்றன. பிரமாண்டமான ஒவ்வொரு ஆலயத்திற்கும் பின்னர் தென் கிழக்காசிய நாடுகளின் போர், மக்கள் போரட்டம் என பல கதைகள் உள்ளடங்கியிருக்கும்.

அதே போல பொதுவாகவே நாட்டிலுள்ள கோயில்களை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்று – சமய சடங்குகள் நடத்துவதற்காக. மற்றொன்று – புத்த மதத் துறவிகள் வசிப்பதற்காக

இந்திய, சீன நாடுகளின் கட்டிடக் கலை தாக்கம் நாடு முழுதும் கோயில்களிலும் இருக்கும்!

புலிகளுக்காக தனியே ஒரு கோயிலும் இருக்கிறது! முழுதும் வெண் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோயிலும் இருக்கிறது.

பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு கட்டப்பட்ட கோயில்களில் முழுக்க முழுக்க ஹிந்து மத தாக்கம் அதிகம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

புத்தர், பிரம்மா, விநாயகர் ஆகிய கடவுள்களைத் தவிர, சிவன், ஹனுமன், கருடன், இந்திரா, நாகா, ராமர், விஷ்ணு, யக்‌ஷன், அப்சரா ஆகிய கடவுள்களும் தாய்லாந்தில் உண்டு.

நம்மூர் கோயில்கள் போலவே இங்கும் கோயில்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அரைகுறை ஆடைகளோடு நுழையக்கூடாது. ச்ப்தம் போட்டு பேசக்கூடாது. கடவுள் சிலைகளை அவமதிக்கக்கூடாது என்று பல சட்டங்கள் உண்டு.

தாய்லாந்து மக்களின் வாழ்க்கையில் கோயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தாய்லாந்தில் உள்ள கோயில்கள் ஒவ்வொன்றையும் பட்டியலிட்டால் அதுவே பல இதழ்களுக்குத் தொடரும். எனவே, கோயில்களைப் பற்றிய இந்த அடிப்படை தகவல்களோடு அடுத்த பகுதிக்குச் செல்வோம்…

அதான்… தாய் மசாஜ்.

பயணிப்போம் வாங்க…

My Photo மாயவரத்தான்…

Source : http://mayavarathaan.blogspot.com/2010/12/6-556.html?utm_source=BP_recent

 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: