RSS

இஸ்லாத்தின் பார்வையில் மூடர் தினம்!

01 Apr

மூடர்கள் தினம் ஒழியட்டும்!இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களோ அறிவுப்பூர்வமான எந்தவிதக் கொள்கையோ இல்லாமல் தங்களின் மனோ இச்சைகளையே கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும் கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி, அவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, அந்த நாட்களைக் கொண்டாடுவது ஆகும்.
இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் எந்த விதமான காரணங்களைச் சொன்னாலும் முஸ்லிம்களாகிய நாம் நமக்கு வழிகாட்டியாக வந்தக் குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு, “தின”ங்களில் வெளிப்படும் தீமைகளைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும் நேர்வழி பெறவும் முயல வேண்டும்.

பொய்யை, பரிகாசத்தை, ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த “மூடர் தினம்”. மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல்(முட்டாள்) ஆக்குவதற்காகப் பொய் பேசுகின்றார்கள். பிறரைப் பரிகாசப்படுத்திப் பார்க்கும் இவ்விஷயம், மக்களுக்கு மத்தியில் சாதாரணமாகத் தெரிந்தாலும் இஸ்லாமியப் பார்வையில் பெருங்குற்றம் ஆகும்.

பொய் கூறுதலையும் பரிகாசத்தையும் பற்றி இஸ்லாம்

பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக, பொய்யை இட்டுக் கட்டுபவர்களெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள்தாம். இன்னும் அவர்கள்தாம் பொய்யர்கள் – அல் குர்ஆன் 16:105.

 

முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்: அவன் பேசினால் பொய்யுரைப்பான்;  அவனிடம் எதையாவது நம்பி ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான் –  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரீ.

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான் – அல் குர்ஆன் 9:77.

பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மை (பேசுவது), நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயமாக சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக் கொண்டே  இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளர் (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். பொய் (கூறல்) நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒருவர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் “பெரும் பொய்யர்” எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் – அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), ஆதாரம்: புகாரீ.

பரிகசிப்பது, கேலி செய்வது அறிவீனர்களின் செயல்:
இன்னும் (இதையும் நினைவு கூருங்கள்:) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள்; “(மூஸாவே!) எங்களைப் பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கேட்டனர். (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார் – அல் குர்ஆன் 2:67.

பொய் பேசுபவனுக்கான தண்டனைகள்:
ஸமுரா இப்னு ஜுன்தப் (ரலி) அறிவித்தார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம், “உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?” என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் நாடியவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள்.) ஒரு(நாள்) அதிகாலை நேர (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரு(வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, “நடங்கள்” என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் நாங்கள் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரிவரை கிழித்தார். அதேபோல், அவரது மூக்கின் ஒரு துவாரத்தையும் ஒரு கண்ணையும் பிடரிவரை பிளந்தார். பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிக்கும்போது அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காகி விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், “அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யாவர்?” என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், “செல்லுங்கள், சென்றுவிடுங்கள்” என்றனர்.

நான் அவ்விருவரிடமும் “நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட அவைதாம் என்ன?” என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், “(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை உங்களுக்கு) நாங்கள் தெரிவிக்கிறோம்:
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவை பிடரிவரை கிழிக்கப்பட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அவன் அதிகாலையில் தன் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போய் ஒருவரிடம் ஒரு பொய்யைச் சொல்ல, அது
(பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேருமே, அவன்தான் –  ஆதாரம்: புகாரீ ( நீண்ட ஹதீஸின் சுருக்கம்).

விளையாட்டுக்காகக்கூடப் பொய்ப் பேசக் கூடாது:
முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் –  ஆதாரம்: திர்மிதீ.

இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய்ப் பேசுவதுகூடத் தடுக்கப்பட்டுள்ளது. அதுபோலப் பிறரை மகிழ்விப்பதற்காகவும் பொய்ப் பேசக் கூடாது.

பொய் சாட்சி கூறல்:
ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க ஒருவன் முயற்சியில் இருக்கும்போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யனுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாகப் பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும்பாவமான காரியமாகும்.

அபூபக்ரா(ரலி) கூறியதாவது: “பெரும்பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். “அறிவியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று நபித் தோழர்கள் வேண்டினர். “அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும்தான்” என்று நபி(ஸல்) கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள்! பொய்ப் பேசுவதும், பொய்ச் சாட்சியமும் (பெரும் பாவம்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம்) என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள் –  நூல்: புகாரீ, முஸ்லிம்.

ஹோலி கலாச்சாரம்:
பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப்படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்துச் செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலிப் பண்டிகையின்போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே, மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! – நூல்: அபூதாவூத்.

இழிவாகக் கருதுவது:
பிறரை ஏப்ரல் ஃபூல்(முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கைகொட்டி ஏளனமாக சிரிக்கின்றார்கள்? ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள் என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும். அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும் உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களைத் தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால்தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அலட்சியமாகக் கருதி, கேவலமாக நடத்தி, இழிவுபடுத்துகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முழுமையான முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர்தான் –  நூல்: புகாரீ.

எனவே, சகோதர-சகோதரிகளே!

 

இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரைத் துன்புறுத்திப் பார்த்து மகிழ்தல், ஏமாற்றுதல் ஆகியவற்றை முழுமூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக்கூறி இதனை நமது தமிழ்ச்சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாக!

Source :இஸ்லாத்தின் பார்வையில் மூடர் தினம்!http://www.satyamargam.com/

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: