RSS

வைகோவின் அரசியல் — சில நினைவுகள்

01 Apr
மிழ்நாட்டு  அரசியலில் வியப்புக்குறியாய் வளர்ந்து இன்று வினாக்குறியாய் நிற்கும் வைகோ எனத் தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் வையாபுரி கோபாலசாமி,முப்பத்தைந்து / நாற்பது ஆண்டுகளுக்கு முன் தமிழக இளைஞர்களால் ஆராதிக்கப்பட்டவர். திமுகவில் எம்ஜிஆர், கருணாநிதிக்கடுத்து  கோபாலசாமியின் கூட்டத்துக்குத்தான் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வருவர். எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்ட பின், ‘கலைஞரின் போர்வாள்’ எனப் புகழப்பட்டவர் கோபாலசாமி.  அவரின் எழுச்சி மிகு உரைகளும் அண்ணாவைப் பின்பற்றி அவர் மேற்கோளிட்டுக் காட்டும் உலக வரலாறுகளும்  இளைஞர்களை அவர்பால் ஈர்த்தன. இதை முறையாகப் பயன்படுத்த திமுக மாணவர் அணியின் இணைச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். மாணவர் அணிச் செயலாளராக எல்ஜி என அழைக்கப்பட்ட எல்.கணேசனும் இணைச் செயலாளர்களுள் ஒருவராக செஞ்சி ராமச்சந்திரனும் இருந்த போதிலும் – எல்ஜி, விஜி, செஞ்சி என அப்போது அழைக்கப்பட்ட மூவரிலும் கோபாலசாமிக்குத்தான் இளைஞர்களிடம் செல்வாக்கு.

இந்திராகாந்தி தமக்கேற்பட்ட அரசியல் நெருக்கடியால் அகில இந்தியாவிலும் நெருக்கடி நிலையை அமுல்படுத்தினார். அப்போது தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடந்துகொண்டிருந்தது.நெருக்கடி நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழகச்  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இந்திராகாந்தி திமுக ஆட்சியைக் கலைத்தார். திமுக தலைவர்களும் முன்னணியினரும் “மிசா”வின்கீழ்க் கைது செய்யப்பட்டனர்.குருவிகுளம்  ஒன்றியத் தலைவராக இருந்த கோபாலசாமியும் மிசாவில் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்தார்.

திமுகவின் பொறுப்பில் இருந்தோர் பலரும் மிசாவுக்குப் பயந்து கட்சியை விட்டு விலகி, அப்படி விலகியதைப் பத்திரிகைகளிலும் விளம்பரமாகக் கொடுத்தனர். இந்தக் கேவலத்தாலும் நெருக்கடி நிலையில் நடந்த அதிகாரவர்க்க ஆர்ப்பாட்டத்தாலும் கொதித்துப் போய் எங்கள் பகுதி இளைஞர்கள் பலர் திமுகவில் உறுப்பினரானோம். திமுக கொடிக்கரை வேட்டியைக் கட்டிக்கொண்டு வலம் வந்தோம்.கரைவேட்டி பளபளக்கக் கொடிக்கால்பாளையத்திலிருந்து திருவாரூருக்கு மாலை வேளையில் நான்  நடந்து சென்றதைப்  புனித யாத்திரையாக நினைத்ததுமுண்டு.

நெருக்கடிநிலை தளர்த்தப்பட்டது.தலைவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மிசாவின் கீழ்ச் சிறையிருந்து மீண்டோர் தம் பெயருக்கு முன்னால் மிசா எனப் போட்டுக் கொள்வதைப் பெரிய கவுரவமாக நினைத்த காலம் அது. கோபாலசாமியும் “மிசா கோபாலசாமி” ஆனார். “மிசா கோபாலசாமி”யை அழைத்து நெல்லையில்  எங்கள் கல்லூரியின் முன் தி மு க கொடியேற்றினோம்.பாளையங்கோட்டை உசேன் வீட்டு மொட்டை மாடியில்  எல் ஜி , வி ஜி , செஞ்சி மூவரின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி மாணவர் அணியைத் தெரிவு செய்தோம். நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டாலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை. கல்யாண மண்டபங்களிலும் திரையரங்குகளிலும் கூட்டம் நடத்திய காலம் அது.  கருணாநிதியை நெல்லைக்கு அழைத்து வந்து பாப்புலர் திரையரங்கில் மாணவர் அணி சார்பாகப் பிரம்மாண்ட கூட்டம் நடத்தினோம்.  என்னைவிடப் பதினோராண்டுகள் வயதில் மூத்தவரான, இளைஞர்களின் கதாநாயகன்  கோபாலசாமியின் பின்னால் செல்வதில் குதூகலம் கொண்டிருந்தோம்.

1977 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல் வந்தது . எம்ஜிஆர் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆனார். நாற்பதெட்டு இடங்களில் திமுக வெற்றி பெற்றது. சட்டமன்றத்தில் துரைமுருகன், ரகுமான்கான், க.சுப்பு போன்றோர் கலக்கிக் கொண்டிருந்தனர்.திமுக வலிமை குன்றாமல் இருந்தது. அதற்குக் கோபாலசாமியும் ஒரு காரணமாக இருந்தார். அதற்குச் சிறப்புச் செய்ய, திமுக சார்பில், “கலைஞரின் போர்வாள்” ஆக 1978 ஆம் ஆண்டு. நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்பபட்டார் கோபாலசாமி.

இடையே 1983 ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கைத் தமிழர்க்கு எதிராக நடந்த கலவரம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. வெலிக்கடைச் சிறையில் , தமிழர் விடுதலை இயக்கத் தலைவர்களான குட்டிமணி, ஜெகன். தங்கத்துரை போன்றோர் கொல்லப்பட்டனர். கட்சி பேதமின்றித் தமிழர்கள் அனைவரும் இலங்கைத் தமிழரை ஆதரித்தனர்.சட்டென உணர்ச்சிவயப்படும் இயல்புடைய  கோபாலசாமி மிக ஆழமாக இலங்கைப் பிரச்சனையில் ஒன்றிப் போனார்; விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரானார்.

எம்ஜிஆர் இறப்பது வரை திமுக மீண்டும் ஆட்சிக்குவர முடியவில்லை.  எம்ஜிஆர் அமெரிக்கா புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தே தேர்தலைச் சந்தித்தபோது இங்கே கருணாநிதி, மக்களிடம், “என்னைத் தண்டித்தது போதாதா… என்னை முதல்வராக்கினால் எம்ஜிஆர் திரும்பி வந்ததும் அவரிடமே ஆட்சியை ஒப்படைப்பேன்” என்று கெஞ்சியதைக் கண்டு வெறுத்து அனைத்து கட்சி./ தலைவர்களின் சார்பு நிலையிலிருந்து விடுதலை பெற்று விருப்பு வெறுப்பின்றி அரசியலை அலசும் நிலைக்கு உயர்ந்து விட்டேன்.எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் ஜா அணி ஜெ அணி என அஇஅதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வர முடிந்தது. 1976 இல் ஆட்சியைப் பறிகொடுத்த கருணாநிதி பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் முதல்வராக முடிந்தது.வாராதுவந்த மாமணிபோல் மீண்டும் ஆட்சி கிடைத்தது எனக் கருணாநிதி மகிழ்ந்திருக்க, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கோபாலசாமி 1989 ஆம் ஆண்டு கள்ளத்தனமாக இலங்கைக்குச் சென்று, தமிழக முதல்வராயிருந்த கருணாநிதிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி E P R L F   தலைவர்   கே பத்மநாபாவும் அவரது ஆதரவாளர்களும்  1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் நாள் சென்னையில் விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளிகள் தப்பிச் செல்ல திமுக அரசு மறைமுகமாக உதவியது என்ற பேச்சு அப்போது எழுந்தது. மத்தியில் ஆட்சி செய்த சந்திரசேகர், உளவுத் துறை தரும் ரகசியத் தகவல்களை தி மு க அரசு விடுதலைப்புலிகளுக்குத் தெரிவித்ததாகக் கூறி 1991 ஜனுவரி 30 ஆம் நாள் திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார்.

விடுதலைப் புலிகள் எம்ஜிஆருக்கே நெருக்கமாக இருந்தனர். அவரிடமிருந்து பெரும் தொகையாகப் பண உதவியும் பெற்றனர். கருணாநிதி  சிறீசபாரத்தினம் தலைமையிலான டெலோ இயக்கத்தவரையே ஆதரித்தார். விடுதலைப்புலிகளின் பெயரால் ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில் , வைகோவுக்காகப் புலிகள் கருணாநிதியைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர் என்ற ஒரு செய்தியும் பரவியது. கட்சியில் வைகோவின் இடம் வினாக்குறியானது. ஸ்டாலினின் வளர்ச்சிக்கு வைகோ இடையூறாக இருக்கிறார் என்ற கிசுகிசுக்களும் பரவின.இறுதியாக ,1993 அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் – நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவரது நீக்கத்தைக் கண்டித்து இளைஞர்கள் நால்வர் தீக்குளித்து மாண்டனர். திமுக வில் மீண்டும் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. திமுகவின் வலிமை வாய்ந்த, கட்சியில் செல்வாக்கு மிக்க  மாவட்டச் செயலாளர்கள் ஒன்பது பேர் கட்சியைத் துறந்து வைகோவுடன் இணைந்தனர். கன்னியாகுமரி மாவட்ட ரத்தினராஜ், நெல்லை இலக்குமணன், மதுரை பொன்.முத்துராமலிங்கம், திருச்சி செல்வராஜ், செங்கல்பட்டு ஆறுமுகம் , தென்னாற்காடு,செஞ்சிராமச்சந்திரன்  போன்றோருடன் கோவை கண்ணப்பன், எல் கணேசன் போன்றோர் வைகோவுக்கு ஆதரவாகச் சேர்ந்தனர். 1994 ஆம் ஆண்டு மதிமுக வைத் துவக்கினார் வைகோ. அப்போது சென்னை ராயபுரத்தில் மதிமுக வின் மாபெரும்  பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது.  “அரசியலில் நேர்மை,பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற முழக்கத்துடன் வைகோவின் கூட்டம் நடக்கிறது; வாருங்கள் போவோம்”என என்னை என் நண்பர் ஒருவர் அழைத்தார்.  இது போன்ற அறிவிப்புகள் பலவற்றைப் பார்த்துவிட்டேன். இவற்றுக்கு அற்ப ஆயுளே. நான் கூட்டத்திற்கு வரவில்லை என்றேன்.

1999 ,  2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுகவுடன் கூட்டு,2006 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டு என, அவருக்காகத் தீக்குளித்து உயிர் நீத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வைகோ தாம் கடுமையாக எதிர்த்தவர்களிடமே சரணடைந்தது நான் சொன்னதை மெய்ப்பிப்பதாகவே இருந்தது. பாமக ராமதாஸ் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுவது தமக்கும் தம் கட்சிக்கும் என்ன நன்மை விளையும் என்பதை கணக்குப் போட்டே நடக்கும். ஆனால் வைகோ தமக்கோ தம்மை நம்பி உடன் வந்தவர்களுக்கோ அல்லது கட்சிக்கோ நன்மை விளைவதைக் கணக்குப்போடாமல் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பதால் எப்போதும் இழப்புக்கே ஆளாகி நிற்கிறார்.

சான்றுக்கு:- 2001 சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் போன்ற ஒரு சில தொகுதிகளுக்காக திமுகவுடன் மோதல்போக்கைக் கடைபிடித்து திமுக கூட்டணியை விட்டு வெளியேறி ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனார். அது போலவே 2006 சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு சில இடங்களுக்கு ஆசைப் பட்டுத் தம்மை 19 மாத காலம் பொடாவில் வேலூர்ச் சிறையில் அடைத்து வழக்கு விசாரணைக்காக ஒவ்வொரு முறையும் போலீஸ்வேனில் சென்னை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று அலைக்கழித்ததையும் மறந்து  அஇஅதிமுகவுடன் கூட்டணி கண்டார் வைகோ. 6 இடங்களில் வென்ற போதும் அன்புச் சகோதரியின் கூட இருந்ததாலோ என்னவோ ஆரம்ப காலத்தில் தம்முடன் திமுகவில் இருந்து வெளியேறிய மு.கண்ணப்பன் எல் கணேசன், செல்வராஜ்,செஞ்சியார் போன்ற தலைவர்களையும் இழந்தார்.

மதிமுகவை அவர் துவக்கியபோது உடனிருந்தவர்களில் பெரும்பாலோர் இன்று  அவருடன் இல்லை. இதோ இப்போது  “பகையாளி குடியை உறவாடிக் கெடு ” என்ற மந்திரத்தின் அடிப்படையில் அன்புச்சகோதரி எடுத்த நடவடிக்கையில் தேர்தல் களத்திலிருந்தே ஓடி விட்டார். இதற்கெல்லாம் காரணம் அரசியல் ரீதியாகச் சிந்தித்து முடிவுகளை எடுக்காமல் உணர்ச்சி வசப்பட்டு அவர் எடுக்கும் முடிவுகளே. இந்தத் தேர்தல் புறக்கணிப்பு இடைவேளையிலாவது அவர் தம் நிலையை நன்கு மாற்றிக்  கொண்டு, “போர்க்குதிரையான மதிமுக மீது மற்றவர்கள் ஏறி சவாரி செய்ய முடியாது. திமுக  – அதிமுகவுக்கு மாற்று சக்தியாக உருவாவோம்,” என, ஈரோட்டில்  மதிமுக மாவட்டக் குழுக்கூட்டத்தில்  பேசியதை உறுதியுடன்  செயல்படுத்திப் பிற கட்சித்தலைவர்களைப்போல அரசியல் தந்திரங்களுடன் தேர்தல் கூட்டணி கண்டால் வருங்காலத்தில் மதிமுக நிலைக்கும்.

– ரஸ்ஸல்.
(ரஸ்ஸலின் அனைத்து அதிரடி அலசல்களையும் இங்கு காணலாம்)

Source : http://www.inneram.com/2011032614903/vaikos-politics

Advertisements
 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: