RSS

தேர்தலுக்குப் பின் விஜயகாந்தின் நிலை?

03 Apr

வடிவேல், குஷ்பூ, பாக்யராஜ், விந்தியா பிரச்சாரம் செய்தால் மக்கள் வாக்களித்து விடுவார்களா?-கண்ணன், திருநெல்வேலி

கூட்டம் சேர்க்கும் உத்தி!

யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் முன்னரே முடிவு செய்து விட்டார்கள்.

வடிவேலுவுக்கு விஜயகாந்தை எதிர்ப்பதும் விமர்சிப்பதும் மட்டுமே நோக்கம். அதற்குரிய மேடையையும் ஊடக விளம்பரத்தையும் திமுக தருகிறது.

குஷ்பூவும் பாக்கியராஜும் திமுக உறுப்பினர்கள் என்ற முறையில் விஐபி பிரச்சாரகர்களாகக் களம் இறங்கியவர்கள்.

விந்தியாவா? யார் அவர்? எந்தக் கட்சி?

இத்தேர்தலில் ரோஜா களம் இறங்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.


புரட்சித் தலைவி, புரட்சிக் கலைஞர் – இவர்களெல்லாம் அப்படி என்னதான் புரட்சி செய்து விட்டார்கள்? – சரோஜா

இவர்களின் பட்டத்தில் ஓர் எழுத்துப் பிழை உள்ளது.

கருப்பாக இருப்போருக்குச் சிவப்பி/ வெள்ளைச்சாமி என்று பெயர் வைப்பதைப்போல, நல்ல சிவப்பாக இருப்போருக்குக் கருப்பையா/ கருப்பாயி எனப் பெயர் வைப்பதைப்போல, நடக்க முடியாமல் ஊனமுற்றிருப்போருக்கு நடராஜன்/ ஆடலரசி எனப் பெயர் வைப்பதைப்போல, எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுக்கு சரஸ்வதி எனப் பெயர் வைப்பதைப்போல இவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள பட்டங்களுக்கும் இவர்களுக்கும் எவ்வித ஒட்டுமில்லை; உறவுமில்லை

‘புரட்சி நடிகர்’ எம்ஜிஆர் தனிக் கட்சி துவக்கித் தலைவரான பின் அவரைப் ‘புரட்சித் தலைவர்’ என்று அழைத்தனர். அவர் இளமை முதல் நடிப்புலகிலும் அரசியல் தளத்திலும் போராடியவர்… எதிரிகளை வென்றவர்… எம்ஜிஆரின் அஇஅதிமுக, எவ்வித முயற்சியும் இன்றி ஜெயலலிதாவின் கைகளில் வந்து விழுந்தபோது கட்சித் தலைவர் புரட்சித் தலைவர் பெயரும் ஜால்ராக்களால் பெண்பால் ஆனது. அவ்வளவே! ஜெயலலிதா திரைப்பட உலகிலோ அரசியலிலோ எவ்விதப் புரட்சியும் செய்யவில்லை.

விஜயகாந்த் திரைப்பட உலகில் ஹீரோவாக வளர்ந்தபோது எம்ஜிஆரின் ‘புரட்சி நடிகர்’ எனும் பட்டத்தின் முன் பாதியையும் கருணாநிதியின் ‘கலைஞர்’ எனும் பட்டத்தையும் இணைத்துப் ‘புரட்சிக் கலஞர்’ என அழைத்தனர். இவரும் ஜெயாவைப்போலவே! திரைப்பட உலகிலும் அரசியல் தளத்திலும் எவ்விதப் புரட்சியும் செய்யவில்லை.


விஜயகாந் உண்மையிலேயே வேட்பாளரை அடித்தாரா?- இறைநேசன், திருவிதாங்கோடு

முதலில் மக்கள் தொகா காட்டியதைப் பார்த்தபோது அப்படித் தோன்றியது. அடுத்து வேட்பாளார், “என்னை அடிக்கவில்லை;மைக்கின் வயர் கழன்றதால் அதை மீண்டும் இணைத்துத் தட்டிப் பார்த்தார்” என்றார். அடுத்து “கீழே விழுந்த மைக்கின் வயரை எடுக்குமாறு என்னைத் தட்டிக் கொடுத்தார்” என்றார். விஜயகாந்தும் “தட்டிக் கொடுத்ததாக”வே சொன்னார்.

இதோ இப்போது புதிதாக வேட்பாளார் சொல்லும் கதை: மைக் வேலை செய்யாததால் ஸவுண்ட் ஸர்வீஸ்காரனின் தலையில் தட்டினார்”

ஒரே நிகழ்வுக்கு மூன்று நான்கு கதைகள் சொல்லப்படுவதிலிருந்து “அடி” விழுந்தது உண்மை என்றே தோன்றுகிறது.


ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருக்கும் விஜயகாந்தின் நிலை தேர்தலுக்குப் பின் என்னாகும்?- இப்னு அலிய், குவைத்

ஐந்தாண்டுகள் அன்புச் சகோதரியிடம் அடைக்கலமாகிக் கிடந்த வைகோ வஞ்சிக்கப்பட்டபின், “ஜெயலலிதா இன்னும் மாறவே இல்லை; ஆணவமும் அகம்பாவமும் குறையவே இல்லை” எனக் கண்டுபிடித்ததுபோல் ஐந்தண்டுகளுக்குள் விஜயகாந்தும் கண்டுபிடித்து நாட்டுக்கு அறிவிப்பார்.


அதிமுக சார்பில் வணங்கா முடியை வேட்பாளராக அறிவித்தால் தாங்கள் போட்டியிடுவீர்களா? – சுஅப்துல் ரஹ்மான், தென்காசிநீங்கள் சொன்ன கட்சி மட்டுமின்றி வேறு எந்தக் கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். என் பண்புக்கு அரசியல் பொருத்தமானதன்று. வாழ்த்திய வாயால் வைவதும் வைத வாயால் வாழ்த்துவதுமாக நேரத்துக்கு நேரம் நிறம் மாறும் பண்பு எனக்கில்லை. காலில் விழும் பழக்கம் கிடையவே கிடையாது.வாக்குறுதி கொடுத்தால் எவ்விலை கொடுத்தேனும் நிறைவேற்றத் துடிக்கும் எனக்குத் தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றோடு கரைந்து போக விடும் அரசியல் சரிப்படுமா? வாக்கு சேகரிக்கும்போது தொகுதிக்காரர்களிடம் பல்லைக்காட்டி இளித்துக் கெஞ்சுவதும் தேர்தலுக்குப் பின் வென்றாலும் தோற்றாலும் கண்டுகொள்ளாமல் போவதுமான இரட்டை வேட அரசியல் எனக்கு உகந்ததன்று. எல்லாவற்றுக்கும் மேலாக இன்று அரசியலுக்குத் தேவைப்படும் ரவுடியிஸமும் கெட்டியான எருமைத்தோலும் எனக்கில்லை. 


இலவசங்களை அள்ளி வீசும் அரசியல் கட்சிகளுக்கு அதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கிறது?- குபேந்திரன்

அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை மட்டுமே அள்ளி வீசுகின்றன.எந்தக் கட்சி ஆளும் கட்சியாகிறதோ அந்தக் கட்சி அரசுக் கருவூலத்திலிருந்துதான் இலவசங்களை மக்களுக்கு வழங்குமே தவிர, கட்சிப் பணத்திலிருந்து இல்லை.கடந்த வாரம் அரசின் கடன் பற்றிய வினாவுக்கு அளித்த விடையையும் பார்க்கவும்.


இலவசங்கள் குறித்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அதனால் வேலை வாய்ப்பு ஒருபுறம் அதிகரிக்கத் தானே செய்யும்? இது குறித்து தங்கள் கருத்து என்ன?? – சுந்தர்யாருக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்?

அரசு, டி வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஃபேன், லேப்டாப் போன்றவற்றை வழங்கினால் சாதாரணக் குடிமகனுக்கு எங்கே வேலை வாய்ப்புக் கிடைக்கும்.? மேற்சொன்னவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களில் உற்பத்தி பெருகும்; அதற்காக அங்கே வேலை செய்வோருக்கு ஓவர்டைம் போன்ற சில பலன்கள் கிடைக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் வரிசையில் காத்து நின்று வாக்களிக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கு வேலை வய்ப்புக் கிடைக்க வேண்டுமெனில், ஏரி குளம் கண்மாய்களை ஆழப்படுத்தல், புதிய அணைகளைக் கட்டுதல், பாலங்களை நிறுவுதல், தரமான சாலைகளை அமைத்தல், கிராமங்கள் தோறும் மேம்பட்ட வசதிகளுடன் மருத்துவ மனைகளை உருவாக்குதல் போன்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

ஆனால் இத்தேர்தலில் இரு பெருங்கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இவை முன்னிலைப் படுத்தப் படவில்லை.


தேர்தலுக்கு முன் இலவசங்களைத் தடுக்கும் தேர்தல் கமிசன், தேர்தலுக்குப் பின் தருவதாகச் சொல்லும் இலவசங்களை ஏன் தடுக்கவில்லை? – நெல்லை ராஜா

ஏட்டுச் சுரைக்காயைத் தடுக்கத் தேவையில்லை. அது கனவு…

தட்டில் விழுவதை மட்டுமே பிடுங்க முடியும். அது நிஜம்.

எனவேதான் தே மு தடுக்கிறது தே க!


நீங்களாவது ஒழுங்கா சொல்லுங்க… கவரை வாங்கலாமா கூடாதா?- அநுத்

வாங்குங்க.. ஆனா குத்துவது மட்டும் கும்மாங்குத்தாக இருக்கட்டும்.


இலவச தேர்தல் அறிக்கைகளுக்கு மத்தியில் முப்பது வருடங்களுக்கு மேலாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆட்சி நிலையை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு புள்ளி விவரம் கொடுத்த மம்தாவின் தேர்தல் அறிக்கை பற்றி? – யமுனா, சேத்பட்மேற்கு வங்க வாக்காளர்களை இலவசங்களால் ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டு அறிவுபூர்வமாக அவர்களை அணுகிய மம்தா பானர்ஜியின் அரசியல் அனுபவத்தை மெச்சுகிறேன்.


சூறாவளி சுற்றுப்பயனம் என்றால் என்ன? சுனாமி சுற்றுப்பயணம்னு ஏதாவது இருக்கா?- முத்து

சொற்களைப் பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது. உவமைகளையும் உருவகங்களையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கவும் கூடாது.

பள்ளி / கல்லூரிகளில் ஆண்டிறுதித் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கப் “பறக்கும்படை” என்ற ஒன்றை உருவாக்குவார்கள். அப்படை பறவைபோலவோ விமானம் போலவோ பறந்தா வருகிறது?

சூறாவளி என்பது மிக வேகமாகச் சுழன்று வரும். அதைப்போலச் சுற்றுப் பயணம் மேற்கொள்பவர் மிக வேகமாகப் பயணம் மேற்கொள்வார் என்பதே பொருள்.

சுனாமி சுற்றுப்பயணம் இதுவரை இல்லை.


இத்தேர்தலில் சீமான் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துவார்?- ரகு

தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு சீமான் வலிமையானவர் இல்லை. அவரது நாம்தமிழர் இயக்கமும் அவ்வாறே!

வைகோவைப் போல நரம்பு புடைக்க உணர்ச்சிமயமாகப் பேசுவதாலும் கண்ணிர் சிந்துவதாலும் சீமான் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.விருதுநகர்த் தொகுதியில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட வைகோ இலங்கைத் தமிழரைப் பற்றிப் பேசியதால் ஜெயித்தாரா என்ன?

காங்கிரஸின் அறுபத்துமூவரைத் தோற்கடிப்பதுதான் சீமானின் நோக்கமெனில் அதற்கென அவர் மெனக்கிட வேண்டாம். அவ்வேலையைக் காங்கிரஸாரே பார்த்துக் கொள்வார்கள்.


இந்த தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது எதைக் காட்டுகிறது?- ரா.சம்சுதீன், திருச்சி

நீங்கள் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர் என எண்னுகிறேன்.

முன் காலங்களில் இதைவிடப் பன்மடங்கு முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். வென்று சட்டமன்ற உறுப்பினர்களகவும் இருந்தனர். இப்போது எண்ணிக்கை குறைவே!


மே. வங்கத்தில் மம்தா பானர்ஜி காங்கிரஸுக்குத் தண்ணி காட்டுகிறாரே. அங்குத் தேர்தல்-போட்டி நிலவரங்கள் எவ்வாறு அமையும்?- வசீகரன், பட்டுக்கோட்டை

காங்கிரஸ் மம்தாவின் தயவால் பிழைத்தால் உண்டு…..

மார்க்ஸிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அணிக்குப் போட்டியாக இருக்கும் .

மம்தா ஆட்சியைப் பிடிப்பாரா என்பது ஐயமே!


இந்தியாவில் – குறிப்பாகத் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெருகி வருகிறது எதை உணர்த்துகிறது?- ராஜ்குமார்

முதல்வர் கனவு நிறைய பேருக்கு வருவதை உணர்த்துகிறது


(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)

வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

Source : http://www.inneram.com/2011040315161/vanagamudi-answers-03-04-2011

Advertisements
 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: