RSS

இனிப்பும் கசப்பும் – பகுதி 2

15 Apr

சென்ற பதிவில் சர்க்கரை நோயின் வகைகள் மற்றும் அந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்று பார்த்தோம். இந்த பகுதியில் இந்த நோய் ஏற்பட்டிருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் மற்றும் எவ்வகையான நோய்கள் இதன் மூலம் ஏற்படுகிறது என்பதைக் காணலாம்.

குறிப்பு:
கீழ்க் காணும்வற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் அச்சப் பட்டுவிடாதீர்கள். அது தற்காலிகமான ஒன்றாகக் கூட இருக்கலாம். அவை தொடர்ந்து இருந்தால் அருகிலுள்ள மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று குறுதிச் சோதனை செய்து கொள்ளலாம்.
அறிகுறிகள்:
-அதிகப்படியான தாகம்
-அடிக்கடி சிறுநீர் போதல்
-அதிகமாப் பசித்தல்
-காரணமில்லாத எடை குறைவு
-உடம்பில் வலியெடுத்தல்
-சோர்வு
-காயங்கள் எளிதில் ஆறாமை
-அடிக்கடி சிறு சிறு நோய்கள் தொற்றுதல்
-சில நேரங்களில் பார்வை தெளிவின்மை.
மேற்கண்டவற்றில் சிலவோ அல்லது எல்லாமோ ஒருவருக்கு இருக்கலாம். இனி, இந்த குறைபாடு எப்படி வருகிறது என்பதையும் ஒவ்வொரு வகையின் தன்மையையும் காண்போம்.
வகை I
அதிகப்படியான சர்க்கரையை glycogen (கிளைக்கோஜன்) ஆக மாற்றி சேமித்து வைக்க கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் தேவையான ஒன்று என்று கண்டோமல்லவா? கணையம் இன்சுலினை சுரகத் தவறும்போது இந்நோய் வெளிப் படுகிறது. ஏன் இப்படி? இந்த இன்சுலின் சுரக்கக் காரணமாக இருக்கும் beta((பீட்டா) செல்கள் கணையத்தில் மிக மிகக் குறைந்தோ, அல்லது முழுவதுமாக இல்லாமலோ இருக்கலாம். இப்படி, பிறக்கும்போதே கூட சில இளம் நோயாளிகளுக்கு இருக்கலாம். அல்லது ஏதோ ஓர் காரணத்தால் அவை அழிக்கப் பட்டும் இருக்கலாம். இம்மதிரியான குறை, இளம் வயதில் (கிட்டத்தட்ட 20 வயதிற்குள்) தோன்றிவிடுவதால் இவ்வகையை Juvenile diabetes- இள வயது சர்க்கரை நோய் என்றழைக்கிறார்கள். இம்மதிரியான நோயாளிகளுக்கு இன்சுலினை வெளியிலிருந்து உடலுக்குள் செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை.
வகை II
இரண்டாவது வகை வயதானவர்களுக்கு(40 வயதிற்கு மேல்) வருவதாகும். கணையதில் இருக்கும் பீட்டா செல்கள் அளவு குறைந்தோ அல்லது இன்சுலின் போதுமான அளவு சுரந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள இயலாத ஓர் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கலாம். இம்மாதிரியான குறைபாடுடையவர்கள் வாய் மூலம் உட்கொள்ளும் மருந்துகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட விளக்கங்களிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோய் ஒரு நோயல்ல – ஒரு குறைபாடு. அந்தக் குறைபாட்டை மருந்துகள் உண்டோ அல்லது இன்சுலின் எடுத்தோ எவ்வழியிலாவது சரிசெய்ய முடியுமானால் வாழ்க்கையைச் சிக்கலின்றிக் கழிக்கலாம்.
முதல் வகையானது 10 விழுக்காடே காணப் படுகிறது. இரண்டாவது வகைதான் வயதானவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. இது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். ஒருவரின் உடற்கூறு, வாழும் வகை, உண்ணும் உணவு, செய்யும் தொழில் இவை எல்லாமே சர்க்கரை நோயின் அளவை நிர்ணயிக்க கூடியவை.
ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை சர்க்கரை நோய் என்று அறிய வந்துவிட்டால்(கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற தற்காலிக வகை தவிர) அந்த ‘வரத்தோடு’ வாழ வேண்டியதுதான். ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து விட்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஒரு பொன்மொழியை மனதில் கொள்ளுங்கள்: சர்க்கரை நோய் நம்மை ஆளுவதற்கு முன்னால் அதை நாம் ஆளத் தொடங்கிவிட வேண்டும். அதனால்தான் சர்க்கரை நோயை treat செய்வதாகச் சொல்வதில்லை; manage செய்வதாகச் சொல்கிறோம். என்ன, முன் சொன்ன அறிகுறிகளில் சில உங்களுக்கு இருப்பதாக எண்ணிக் கொண்டு குறுதிச் சோதனை செய்து கொண்டுவிட்டீர்களா? எல்லாம் சரியாக இருக்கிறதா? வாழ்த்துக்கள்.

இல்லை, இரத்தத்தில் சர்க்கரை இருப்பதாகத் தெரிய வந்ததா? கவலையை விடுங்கள். அயர்ந்து போக வேண்டாம். இந்த உலகில் நீங்கள் தனித்தவரல்லர். உங்களோடு கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்களுள் இலட்சக் கணக்கான அறிவியலாளர்களும், பேராசிரியர்களும், பொறியிலாளர்களும், கணினி வல்லுனர்களும், மருத்துவர்களும், விளையட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இந்த நோய் கொண்டிருந்தும் அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்களும் உண்டு. அது ஏன் –

கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வேகப் பந்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த வசீம் அக்ரம், இன்சுலின் எடுத்துக் கொள்ளும் ஒரு சர்க்கரை நோயாளிதானாம்!
சர்கரை நோயை முன்னறிய முடியுமா? அவற்றை தடுத்துக்கொள்ள முடியுமா? இக்கட்டுரையைப் படிக்கும்போது எல்லோர் மனதிலும் எழக்கூடிய முதல் கேள்வி. இதற்கு ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ பதில் சொல்ல இயலாது. காரணம், கணையத்தில் ஏற்படக்கூடிய கட்டி, கல்லடைப்பு, வீக்கம் போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப் படும் சூழ் நிலை தவிர இது உடம்பிற்குள்ளேயே முன் கணிக்கப்பட்ட(programmed) ஒன்றாக அமைந்து விடுகிறது. இதில் பாரம்பரியமும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. தாயோ அல்லது தந்தையோ சர்க்கரை நோயாளியாக இருந்தால் பிள்ளைகளுக்கும் வர அதிக வாய்ப்பிருக்கிறது. இப்படி முன் கணிக்கப் பட்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள இயலுமா? கடினம்தான். ஆனால் இந்த நோய் தலைகாட்டப் போகும் சற்று முன் அறிந்து கொள்ள இயலும். இதற்கு GTT – glucose tolerance test(சர்க்கரை அளவை தாங்கும் தன்மை) ஒன்றைச் செய்து கொள்ளலாம். ஓர் இரவுப் பட்டினிக்குப் பின், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்(எடுத்துக்காட்டாக அரை மணிக்கொருமுறை) ஒரு குறிப்பிட்ட அளவு(50 – 100grams) கரைக்கப் பட்ட சர்க்கரையை(glucose)க் கொடுத்து அதே இடைவெளியில் இரத்ததை எடுத்து சோதனை செய்வர். ஒரு நோயில்லாத மனிதருக்கு சர்க்கரையின் அளவு அவ்வளவு ஒன்றும் கூடிவிடாது. ஆனால் நோய் இருக்கும் மனிதருக்கு அதன் அளவு கூடியே இருக்கும்.
பொதுவாக உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பிருக்கிறது. உடல் எடையை அளவாக வைத்துக் கொள்ளுதல், தொடர்ந்த உடற்பயிற்சி, மனச் சிக்கல்(stress) இல்லாமல் பார்த்துக் கொள்ள்ளுதல் ஆகியவை இந்த நோயைத் தூர வைப்பதற்குண்டான வழியாகும்.
சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகமாகியிருக்கிறது. என்றாலும் பலருக்கு இந்தோய் இருப்பது தற்செயலாகவே தெரிய வருகிறது. வேறு ஏதாவது ஒரு நோய்க்காக குறுதிச் சோதனை செய்யும்போது குறுதியில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகத் தெரிய வரும்போதுதான் பலர் இந்த நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்று அறிய வருகிறார்கள்.
நாம் முன்பு கண்டபடி இந்நோயின் சில அறிகுறிகளோடு(தாகம், அடிக்கடி சிறுநீர் போதல், சோர்வு போன்றவை) இதன் தாக்கம் நின்று விடுவதில்லை. அவ்வறிகுறிகள் இனி ஏற்படப் போகும் சிக்கல்களுக்கான முன்னோடிகள். சர்க்கரை நோய், வேறு பல நோய்களின் தாய் என்று சொன்னேனல்லவா? அவற்றுள் அச்சமுறுத்தும் நோய்கள் சில:
-கண்பார்வை பாதித்தல்
-சிறுநீரகங்கள் பழுதடைதல்
-இதய நோய்
-கால்களில் புரையோடிய புண்
அதிர்ந்து போய்விடாதீர்கள். சர்க்கரை நோய் ஆரம்பித்த ஓரிரு நாட்களில் இவை வந்துவிடுதில்லை. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்காமல் ஆண்டுக் கணக்கில் தொடர விடுவோமானால் இவ்விளைவுகள் உண்டாகும். முதலில் தொடக்க கால அறிகுறிகளான தாகம், சிறுநீர் அடிக்கடி போதல் போன்றவை ஏன் ஏற்படுகிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

தொடரும் – பகுதி 3

–உமர்

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: