RSS

என்ன யோக்கியதை இருக்கிறது 2G பற்றிப் பேச!

30 Jun
டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலையோடு சமையல் எரிவாயுவின் விலையையும் ரூ 50 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. ஏற்கெனவே அத்தியாவசிய பொருட்களின் தாறுமாறான விலையேற்றத்தால் அல்லல் படும் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை மக்களுக்கு இது கண்டிப்பாக பெருஞ்சுமை என்பதை மறுப்பதற்கில்லை.
அதேசமயம், சில விஷயங்களில் யதார்த்தமென்ன என்பதையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அண்டைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டில் பெட்ரோல் விலை அதிகமே. ஆனால், கேஸ் உற்பத்தியில் முதல் நிலையிலுள்ள நாடுகளில்கூட சிலிண்டர் ஒன்றுக்கு கேஸ் விலை சுமார் 200 க்கு அருகில் உள்ளது. அதனடிப்படையில் பார்த்தால், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை நம் நாட்டில் குறைவு தான். காரணம், சமையல் எரிவாயுவுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ 350 வரை மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அண்டைய நாடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு  ரூ 485  முதல் ரூ 880   வரை விற்பனை செய்யப் படுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய அரசும் மாநில அரசும்  தாறுமாறான வரியை விதித்து விலைவாசியை உயர்த்தி வருவதை நாம் பல நேரங்களில் விமர்சித்துள்ளோம். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்துக்கு நேரடி காரணியாக இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோலின் விலைகளை மத்திய அரசு ஒரு கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியமே. இதற்காக, சமையல் கேஸுக்கு வழங்கும் மானியத்தில் மாற்றத்தை உருவாக்கி, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையினை இயன்றவரைக் குறைக்க முயற்சி செய்யலாம்.

இவ்வாறு நாம் கூறுவதற்குக் காரணமுண்டு. சமையல் எரிவாயுவுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தை, பொதுமக்கள் முறைகேடாக பயன்படுத்துவதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு அதிகரிக்கிறது. முறைகேட்டைப் பொதுமக்கள் செய்தாலும் அரசு செய்தாலும் அதனைப் பாரபட்சமின்றிச் சுட்டிக் காட்டும் கடமை நமக்குண்டு.
வறுமை கோட்டிற்குக் கீழும் நடுத்தர வர்க்கத்திலும் அல்லாடும் மக்களுக்கு அரசு மானியங்கள் வழங்குவது மரபுதான்; அது செய்யப்படவேண்டியதும்கூட. மாதத்துக்குச் சர்வசாதாரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர் உபயோகிக்கும் அளவுக்கு வசதி கொண்டோருக்கும் இந்த மானியம் வழங்க வேண்டிய அவசியமென்ன?

எனவே, சமையல் எரிவாயுவுக்காக அரசு வழங்கும் மானியம், சிரமப் படும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மட்டும் உரிய முறையில் சென்று சேரும் வகையிலும் அவர்களுக்கு வழங்கும் இந்தச் சலுகையினை வசதிபடைத்தோர் சட்டவிரோதமாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிபடுத்தும் வகையிலும் அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக, குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாத வருமானம் உள்ளவர்கள், உயர் அரசு வேலை பார்க்கும் மற்றும் வருமான வரி செலுத்துவோர், மாதத்துக்கு ஒன்றுக்கு மேல் சிலிண்டர் உபயோகிப்போர் ஆகியோருக்கு சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்கலாம். மேலும், நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு 30  நாட்கள் அல்லது 45 நாட்கள் என வரைமுறை செய்து, குறிப்பிட்ட நாட்களில் ஒரு சிலிண்டர் மட்டுமே மானியம் வழங்கப் பட வேண்டும். இவ்வாறு மானியத்துடன் வரும் கேஸ் சிலிண்டர்களை, மண்ணெண்ணெயை ரேசனில் வழங்கிக் கொண்டிருப்பதுபோல், ஒரு சோதனை முயற்சியாக ரேசன் கடைகளில் டோக்கன் பெற்று வருவோருக்கு மட்டும் மானிய விலையில் வழங்குவதற்கு அரசு முயற்சி செய்யலாம்.

தற்போதைய நிலையில், மாதம் ஒரு சிலிண்டருக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அரசு மானியத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களிலும் வீடுகளுக்கு வழங்கப் படும் சமையல் எரிவாயுவே பயன்படுத்தப் படுகிறது. 22 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம் என்பது விதி. இதன் படி வீடுகளில் வாங்கிய சிலிண்டர் காலியாகிறதோ இல்லையோ 22 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் வாங்கி, கூடுதலாக ரூ 50 முதல் ரூ 100 வரை விலை வைத்து ஹோட்டலுக்கு விற்று விடுகிறார்கள் பொதுமக்களில் பலர்!

அரசின் மானியத்தில் தனியார் ஹோட்டல் முதலாளிகள் கொழுக்கிறார்கள்! இவ்வாறு தனியார் ஹோட்டல் முதலாளிகள் மக்களின் மானிய பணத்தில் நடத்தும் பகல் கொள்ளைக்குப் பொது மக்களும் அறிந்தோ அறியாமலோ துணை போகின்றனர்.

இது போக பலரும் சிறிய ரக கார்களில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தியும் அரசு மானியத்தைத் திருடி வருகின்றனர். வெளிச் சந்தையில் ஒரு கிலோ ரூ 75 கொடுத்து வாங்க வேண்டிய எரிவாயுவைக் கள்ளச் சந்தையில்  ரூ 30 கொடுத்து வாங்கி உபயோகப் படுத்துகின்றனர் இவர்கள். சுமார் 350 ரூபாய் நஷ்டத்திற்கு அரசு தரும் கேஸ் சிலிண்டரை 50, 100 க்கு ஆசைப்பட்டுத் தனியார் முதலாளிகளுக்கு விற்பதன் மூலம், வரிகள் மூலம் அரசுக்கு நாம் செலுத்தும் பணத்தில் ஒரு பகுதியினைத் தனியார் முதலாளிகள் களவாட நாமே காரணமாக இருக்கிறோம் என்பதை இவர்கள் யோசிக்க மறந்து விடுகின்றனர். இது தான் 2G விவகாரத்திலும் நடந்தேறியது. அரசின் செல்வத்தை எடுத்து ஒன்றுமில்லா விலைக்குத் தனியார் முதலாளிகளுக்கு விற்று இன்று திகார் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள்.

சமையல் கேஸ் சிலிண்டர் விஷயத்தில், ஒரு வகையில் நாமும் அதேபோன்ற முறைகேட்டில் தான் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறோம். அவ்வாறிருக்கும்போது, நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது 2G முறைகேடு பற்றிப் பேச! என்ன தொகை மட்டும் அங்கு கோடிகளில் இங்கு நூறுகளில்! ஆனால், இந்த 50, 100 கள் அரசின் ஆண்டு பட்ஜெட் இழப்பில் கோடிகளை எட்டுவதை நாம் மறந்து விடலாகாது. முறைகேடு எனில், எல்லாமே முறைகேடு தான்! அது அரசன் செய்தாலும் ஆண்டி செய்தாலும்!

இதனை உணர்ந்து இனிமேலாவது அரசு, மானியத்தில் தரும் கேஸ் சிலிண்டர்களை 22 நாட்களில் கிடைக்கிறது என்பதற்காக தேவைக்கு அதிகமாக வாங்கித் தனியார் முதலாளிக்கு விற்று காசுபார்ப்பதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்பவர்கள் அரசு பணத்தை முறைகேடு செய்கின்றனர் என்பதை உணரவேண்டும்.

அரசும் கேஸ் சிலிண்டர் விஷயத்தில் வழங்கும் மானியம் அல்லல்படும் நடுத்தர, ஏழை மக்களுக்கு மட்டுமே சென்று சேருவதை உறுதிபடுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்தால் அதன்மூலம் குறையும் இழப்பை, டீசல், பெட்ரோல் விலையினைக் குறைக்கப் பயன்படுத்தி ராக்கட் வேகத்தில் உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வரச் செய்யலாம். அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்போம்!

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: