RSS

கனிமொழிக்கு மட்டும் பிணை மறுக்கப்படுவதேன்?

04 Jul

புவி வெப்பமயமாதல், புவி வெப்பமயமாதல் என்று பரபரப்பாக சில காலத்திற்கு முன்பு பேசப்பட்டதே வ.மு அய்யா.  இப்போது அது பற்றிய பேச்சையே காணோமே.  புவி வெப்பமயமாதல்  குறைந்து விட்டதா? அல்லது நின்று விட்டதா? – கணேசன், சீர்காழி.

புவி வெப்பமயமாதல் குறையவில்லை; ஆனால் அதைப் பற்றிய பரபரப்பான செய்திகள் குறைந்து விட்டன.

புவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு  இயற்கையான  காரணங்கள் உண்டா அல்லது மனித சமூகத்தால்  உருவாக்கப்படும் வாயுக்கள் காரணமா என்பது இன்னும் நிச்சயிக்கப்படவில்லை. சிலர் இயற்கையைச் சொல்லும்போது மற்றும் சிலர் மனிதனால் உருவாக்கப்படும் கார்பனைச் சொல்கின்றனர்.

புவி வெப்பமயமாவதால்  துருவப் பகுதிகளில் இருக்கும் பனிமலைகள் உருகிக் கடலின் நீர் மட்டம் அதிகமாகிப் பல நகரங்கள்  மூழ்கும் ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மாலத்தீவு, ஹாலந்து போன்ற நாடுகள் இதில் முதலிடத்தில் உள்ளன. நம் தமிழ்நாட்டின் சென்னை தூத்துக்குடி போன்ற நகரங்களும் இவ்வாபத்தின் அண்மையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் புவி வெப்பமயமாவதால் தென்மேற்குப் பருவ மழையும் பொய்த்துப் போகும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. மனிதன் அறிவியலில் முன்னேறிக் கொண்டே போய் இயற்கையுடன் போட்டி போடும்போது இயற்கை தன் எதிர்வினையை ஏதாவது ஒரு வழியில் காட்டிவிடுகிறது..


திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் சசிகலாவே களம் காணப் போகிறாராமே? – ராஜ்குமார், நாகர்கோவில்.

அதில் உங்களுக்கென்ன நட்டம்.?  வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் இந்தியக் குடிமகன்/மகள் யாராயினும் தேர்தலில் போட்டியிடலாமே.

சசிகலா போட்டியிட்டு வென்றால் ஜெயலலிதாவுக்கு வீட்டில் இருப்பதைப் போன்ற ஆதரவும் ஆறுதலும் சட்டசபையிலும் கிடைக்கும். சசிகலா துணை முதல்வரானால் ஜெயலலிதா முழு ஓய்வு கூட எடுக்கலாம்.


3G, 4G என்றெல்லாம் டெக்னாலஜி வளர்ந்தபின்னும், இன்னமும் 2G வழக்கே நடந்து கொண்டுள்ளதே, இந்தியா பின்தங்கிய நாடு என்பதாலா? – கார்த்திகேயன், சென்னை.

உங்கள் வினா ஊழலுக்கெதிரான குறும்பா அல்லது கடுப்பா?

நத்தையையும் ஆமையையும்  வெல்லும் வேகம் கொண்ட இந்திய நீதித் துறையில் 2 ஜி வழக்கு ஓரளவு வேகத்துடன் தான் செல்கிறது.

கவலைப்படாதீர்கள்.. – 2 ஜிமுறைகேடு கண்டு பிடிக்கப்பட்டதால் 3 ஜி 4 ஜி ஆகியவற்றில் ஊழல் இல்லை என நம்பலாம்.


2G வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டும் ஆர்வத்தை ஜெ.மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் காட்டாதது ஏன்? – சாமுண்டீஸ்வரி, பெங்களூர்.

கர்நாடக நீதிமன்றத்தில் நடக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அவரின் தந்திரங்களால் இழுத்துக்கொண்டேஏஏ  போகப்படுகிறது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு மத்திய அரசை மோசடி செய்ததற்காக உச்சநீதி மன்றத்தின் நேரடிப் பார்வையில் நடக்கிறது.


கொலை வழக்கில் சிக்கிய சாமியார்களெல்லாம் பிணையில் உலாவரும்போது கனிமொழிக்கு மட்டும் பிணை மறுக்கப்படுவதேன்? – ரத்னவேல், முருகம்பாக்கம்.பெரும்பாலும் கொலை வழக்குகள் சிக்கலின்றி புனையப்பட்டுவிடும்.(பார்க்க – ரஸ்ஸலின் அலசல் – பொய்க் குற்றச்சாட்டும் போலீஸ் முறையும்) குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டால் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவர் சாமியாராயினும் சாதாரணமானவராயினும் பிணையில் வரலாம்.

கனிமொழி வழக்கு, அரசுக்கு வரவேண்டிய  மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் பெரும்புள்ளிகள் முறைகேடாகச் சுருட்டிக் கொண்ட  ஊழல் வழக்கு. இவ்வழக்கைச் சிக்கலின்றி நடத்தித் தண்டனை பெற்றுத்தர நிறைய உண்மைகளையும் ஆதாரங்களையும் சாட்சிகளையும் சேகரிக்க வேண்டும்; அதற்காக நிறைய உழைக்க வேண்டும். எனவே இவை முடிவது வரை குற்றம் சுமத்தப்பட்டவர்கள்  பிணையில் வர ஸி பி ஐ எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டே இருக்கும். அதனால்தான் கனிமொழிக்குப் பிணை இல்லை என உச்சநீதிமன்றமும் சொல்லி விட்டது.
கனிமொழிக்கு மட்டும் பிணை மறுக்கப்படவில்லை. ஆ.ராசா, ஸ்காஹித் உஸ்மான் பல்வா, சரத்குமார் ரெட்டி போன்றோருக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளதே?


ஏன் எப்போதும் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும் பாமக ஆட்சியைப் பிடித்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என முழங்குகிறார்? – மணி, பண்ருட்டி.அதிலென்ன தவறு? ஓர் அரசியல் கட்சித் தலைவர் தம் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்குச் செய்யப்போவதாகச் சொல்வது அரசியல் சட்டம் அனுமதித்த ஒன்றுதானே?

இப்போது நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இலவசங்களை அள்ளி வழங்குவதாக வாக்குறுதி தந்ததை மறந்து விட்டீர்களா? “மூன்றுபடி லட்சியம்; ஒரு படி நிச்சயம்” என்ற வாக்குறுதி இளம் தலைமுறை அறியாத ஒன்று.


உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் ஊழலை ஒழித்துக்கட்ட இயலும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? – நடேசன், துபை.பொதுமக்கள் நினைத்தால் முடியும்.

இது தொடர்பாக இரு முறை இப்பகுதியில் விடையளிக்கப்பட்டுள்ளது.


சென்னை ப்ளாட்பாரங்களில் இப்போதும் பலர் குடும்பம் நடத்துவதைப் பார்க்கிறேன். அரசு வழங்கும் இலவச திட்டங்களெல்லாம் யாரைச் சென்றடைகின்றன? – மீரான், சென்னை.ரேஷன் கார்டு எனப்படும் உணவுப்பங்கீட்டு அட்டை உள்ளவர்களுக்கு இலவசங்கள் கிடைக்கும். சென்னை பிளாட்பாரங்களில் வசிப்போர் தம் தொழில் நிமித்தம் நகருக்குள் வசிக்கின்றனர். இவர்களுள் பலருக்கும் ரேஷன் அட்டை உண்டு.


வளைகுடா நாடுகளில் உள்ளது போன்று கைரேகை அடையாளமெடுத்து, ஒவ்வொருவருக்கும் தனித்தனி அடையாள எண் அட்டைகள் கொடுத்தால் கள்ள ஓட்டிலிருந்து, சிறிய/பெரிய குற்றங்கள் வரை இல்லாமலாக்க முடியுமே. வளைகுடா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கு இதுவரை இந்த எண்ணம் ஏற்படாமைக்கான காரணமென்ன? – அருள், கத்தர்.ஒண்டக் குடிசையும் உடுக்க உடையும் இல்லாதவன் அடையாள அட்டையை எங்கே வைத்துப் பாதுகாப்பான்?


முன்னர் போன்று பள்ளிப் பாடங்களில் இணைக்கத்தக்க இலக்கியங்கள் தோன்றாமைக்கான காரணமென்ன? படைப்பாளர் போதாமையா? படைப்புத்திறன் போதாமையா? – தமிழன்பன், மதுரை.

இலக்கியங்கள் உருவாகின்றன; ஆனால் அவற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வைக்கும் அளவு   செல்வாக்கு இலக்கியவாதிகளுக்கு இல்லை.


(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)

வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

Source : http://www.inneram.com/2011070317645/vanagamudi-answers-03-07-2011

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: