RSS

நார்வே தாக்குதல் – ஊடக அதர்மம்

31 Jul

 

கடந்த மாதத்தில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதும் நார்வேயில் Anders Behring Breivik எனும் தனிநபரின் பயங்கரவாதத் தாக்குதலில் 92 பேர் கொல்லப்பட்டதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. ஆனால் இரண்டு தாக்குதல்களும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமும் அதை ஊடகங்கள் காட்சிப்படுத்திய விதமும், கொடுத்த முக்கியத்துவமும் ஊடக தர்மத்தை கேள்விக்குறியாக்கி இருப்பதோடு கவலைக்குரிய பல விஷயங்களை நம்முன் எழுப்பியுள்ளன.

எப்படி குண்டு வெடிப்பதற்கு முன்பே அதை வைத்தவர்களின் பெயர்களை வெளியிடும் அளவுக்கு இந்தியாவின் ஊடகங்கள் புலனாய்வுப் பத்திரிகைகளின் சூப்பர் பவராக விளங்குகின்றதோ அதுபோல் நார்வே தாக்குதலில் Anders தன் நாசத்தைத் தொடங்கி, அதை முடிக்கும் முன்னரே “இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் முஸ்லிம்கள்” எனும் பொருளில் உலக ஊடகங்கள் தங்கள் கற்பனையைச் செய்தியாய் உமிழ்ந்தது கவலைக்குரியது. நார்வேயில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைக் குறித்து ஊடகங்களின் பார்வையை வரலாற்று நிபுணரான ஷிவா பலாஹி தன்னுடைய இணைய தளத்தில் இவ்வாறு எழுதுகிறார் “Tragic Day for Norway, Shameful Day for Jounalism” (நார்வேக்கு நாச தினம்; ஊடகத்துக்கு அவமான தினம்). அவரின் கூற்று உண்மை என்பதைத்தான் நாம் தினந்தோறும் பார்க்கும் காட்சிகள் உண்மைப்படுத்துகின்றன.

இந்த நாசகார செயலை செய்தவன் முஸ்லிமில்லை; மாறாக, அவன் முஸ்லிம் விரோதப் போக்கைக் கொண்டவன் என்பது தெரியவந்தபோது ஊடகங்கள் தங்கள் சுருதியை மாற்றிக் கொண்டன. அவ்வாறு மாற்றியபோது அதற்கு எம்மதச் சாயமும் பூசப்படவில்லை என்பது மாத்திரமல்ல இக்கொடுஞ் செயலைச் செய்வதற்குக் கொலைகாரனின் பக்கமிருந்த நியாமும் ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டது. பிரிட்டனின் மிகப் பிரபலப் பத்திரிகையான The Sun தன் தலையங்கத்தில் “நார்வேயின் 9/11 – அல்காயிதாவின் நாசவேலை” என்று எழுதித் தன் முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்திக் கொண்டது. அப்படுகொலைகளைச் செய்தவனின் உண்மை விபரங்கள் வெளிவந்த பிறகும் “ஒருவேளை அல்காயிதாவால் உருவாக்கப்பட்ட உள்நாட்டுத் தீவிரவாதியாக இருக்கலாம்” என்று தன் பொய்யை உண்மைப்படுத்த முனைந்தது சன் இதழ்.

“குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவன் குற்றமற்றவனே” என்பது எல்லாக் காலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொது நியதி என்றாலும் முஸ்லிம்களின் விஷயத்தைப் பொருத்தவரை அது தலைகீழாக வெகுகாலம் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆம் “குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும்வரை முஸ்லிம் என்பவன் குற்றவாளியே” என்று குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு முஸ்லிமின் மேல் சுமத்தப்பட்டுள்ளது. ஊடகங்கள் கடந்த காலத்தில் சில நிகழ்வுகளின் அடிப்படையில் முந்திக் கொண்டு செய்தியை வெளியிட வேண்டும் என்ற அடிப்படையில் குண்டு வெடித்தவுடன் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட செய்திகளை வெளியிட்டு தங்கள் பாப்புலாரிட்டியை தக்க வைத்து கொள்கின்றன.

“எப்போதும் மனிதனுக்கு இனம் தெரியா எதிரியின் மேல் ஒருவகை அச்சம் இருக்கும். அவ்வச்சத்தை ஊதிப் பெரிதாக்கி விற்பனையை அதிகரிப்பதே பத்திரிகைகளின் வேலை. இப்போது ஊடகங்களுக்குத் தம் வாசகனிடத்தில் விற்பதற்கு மிகச் சிறந்த அச்சமூட்டும் எதிரியாக இஸ்லாம் ஆகிப்போயிருக்கிறது” என்று ஒரு மனோதத்துவ நிபுணர் குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு சில ஊடகங்கள் நேர்மையாய் நடந்தாலும் பெரும்பாலான மேற்குலக ஊடகங்கள் “இஸ்லாமோஃபோபியா”வால் பாதிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. சில ஊடகங்கள், “தாக்குதல் நடத்தியவன் இஸ்லாத்துக்கு மதம் மாறியவனாக இருக்கலாம்” என்றும் ஆரூடக் கருத்திட்டன. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தில் தற்போது பணிபுரியும் அமெரிக்க அரசின் தீவிரவாத ஒழிப்பின் சிறப்பு ஆலோசகர் வில் மெக்கண்ட்ஸ் இச்சம்பவம் நடைபெற்றவுடன் இது உடனடியாக ஒரு இஸ்லாமிய தளத்தில் வெளியிடப்பட்டதைச் சுட்டிக் காட்டி,”இது இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்” என்று சொன்னதை அமெரிக்காவின் மிகப் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. இதனால் நமக்குப் புலப்படும் யதார்த்தம் என்னவென்றால் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு ஆலோசகர்களின் இலட்சணமும் இஸ்லாத்தைப் பற்றிய அவர்களது மிரட்சியும்தான்.

இந்திய ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மேற்குலகின் ஊடகத்துக்குச் சற்றும் சளைக்காமல் எதையும் ஆராயாமல் மனதில் பட்டதை அப்படியே பரபரப்புக்காக எழுதும் ஊடகங்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும்; நிதானிக்க வேண்டும். தாங்கள் எழுதும் ஒரு சில வரிகள் ஒரு சமூகத்தின் மீதான தாக்குதலுக்கு வழிகோலிடும், மிகப் பெரும் கலவரத்துக்கு வழி வகுக்கும் என்பதை உணர வேண்டும். ஊடகங்கள் இனிமேலாவது தங்கள் பொறுப்பை  உணர வேண்டும்

சத்தியத்தைச் சார்ந்து இயங்கும் அதிகாரிகளும் ஊடகங்களும் இல்லாமலில்லை. ஆனால் சொற்பம். ஹேமந்த் கார்கேரே போன்று ஒரு நேர்மையான இந்திய அதிகாரி இல்லாவிட்டால் நம் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவித் தீவிரவாதம் என்பதே வெளியே தெரியாமல் போயிருக்கும். டெஹல்கா போன்ற நடுநிலை ஊடகங்கள் இல்லாவிட்டால் உண்மையான கோத்ரா நிகழ்வும் தொடர்ந்து குஜராத்தில் அதன் முதலமைச்சரே தலைமையேற்று நடத்திய கோரத் தாண்டவமும் ‘இருதரப்பினர் மோதல்’ எனும் பிசுபிசுப்பான பூஞ்சைச் செய்தியாகி இருக்கும்.

ஏதோ தீவிரவாதம் என்றாலே ஒரு குறிப்பட்ட சமூகமே குத்தகைக்கு எடுத்துள்ளது போன்ற எண்ணங்களை ஊடகங்கள் கைவிட்டு தங்கள் பொறுப்பை உணர்ந்து யூகங்களையும், சந்தேகங்களையும் தவிர்த்து விசாரணையின் கோணம் மாறாமல் செய்திகளை வெளியிட முன்வரவேண்டும்.

நச்சுகள் எங்கு இருந்தாலும் அவை அழிக்கப்பட வேண்டியவையே – எந்த மதச் சாயத்தைப் பூசிக் கொண்டிருப்பினும்.

Source : http://www.satyamargam.com

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: