RSS

ஜெயலலிதா இந்தியாவிலேயே அறிவில் சிறந்த முதலமைச்சரா?

26 Sep

“இந்தியாவிலேயே அறிவில் சிறந்த முதலமைச்சர் ஜெயலலிதா” என மன்மோகன்சிங் குறிப்பிட்டாராமே? – வெற்றிச்செல்வன், பொட்டல்புதூர்.

மெத்தப் படிக்கும் யாரும் அறிவாளி ஆகலாம்.”இந்தியாவிலேயே திறமையான முதலமைச்சர்” என, பிரதமர் புகழ்வதுதான் பெருமையே தவிர அறிவாளி எனப் புகழ்வதில் சத்தில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் ஒருவரை அறிவாளி எனப்புகழ மன்மோகன்சிங்குக்கு என்ன நிர்பந்தமோ?

மன்மோகன் சிங் தொலைபேசி உரையாடலில் அவ்வாறு கூறி இருந்தாலும் அதை மன்மோகன் சிங் தமது வாயால் வெளிப் படுத்துவதே முதல்வர் பதவியில் வீற்று இருக்கும் ஜெயலலிதாவுக்கு அழகேயன்றி, அரசின் செய்திக் குறிப்பு மூலமாக தெரிவிப்பது முறையன்று.


வாகனத்தில் ஆம்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை ஏன் தலை கீழாக எழுதுகிறார்கள்? – அப்பாவு ஆறுமுகம், அருப்பு கோட்டை.

தலைகீழாக எழுதுவதில்லை; வலமிடமாகத் திருப்பி எழுதுவர்.

பிறரது கவனத்தைச் சட்டென ஈர்க்க வித்தியாசமாக எதையாவது செய்தாக வேண்டுமே?

2006-2011 வரை நடைபெற்ற நில அபகரிப்பு வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்பது அரசியல் அசிங்கம் அல்லவா? – நிலா, சென்னை.

ஜெயலலிதா மீதே கொடநாடு சிறுதாவூர் எனப்புகார்கள் இருக்கின்றனவே?

கடந்த தி மு க ஆட்சிக்காலத்தில் நடந்தவை மட்டும் விசாரிக்கப்படும் என்பது அரசியல் அசிங்கம்தான். அரசியல் நோக்கத்தோடு புனையப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை எனத் தி மு கவினர் புலம்புவதை உண்மையாக்கிவிடுவாரோ ஜெயலலிதா?

அ இ அ தி மு க ஆட்களின் மீது வரும் புகார்களையும் நேர்மையாகப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால்தான் அவரது நம்பகத்தன்மை வலுப்படும்.

கைது செய்யப்பட்டுள்ள தி மு கவினர் மீது விரைந்து வழக்கு நடத்திக் குற்றவாளிகள் எனில் தண்டனை வழங்கவும் நிரபராதிகள் எனில் விடுதலை வழங்கவும் அரசு விரைந்த முயற்சியில் ஈடுபடவேண்டும். ஜெயலலிதா தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிப்பதுபோல இவர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடாது.


மரண தண்டனை கூடாது என்று முழங்கும் சில தமிழக அமைப்புகள் செங்கொடி  போன்றோரின் ‘தற்கொலை’யைப் போற்றிப் புகழுவது முரண்பாடு தானே? – பாபு, முத்துகிருஷ்ணபுரம்.

தற்கொலை என்பது உணர்ச்சிவயப்பட்ட நிலையில் திடீரென எடுக்கும் முடிவால் நிகழ்வது.

மரணதண்டனை என்பது வழக்கின் தன்மை, குற்றப்பத்திரிகை, சான்றுகள், நேரடி சாட்சிகள் வழக்கறிஞரின் வாதம் போன்றவற்றைப் பரிசீலித்து ஆய்ந்து நிதானமாக வழங்கப்படுவது.

செங்கொடி, முத்துக்குமார் போன்றோரின் தற்கொலையைப் புகழ்வதும் உணர்ச்சிவயப்பட்டுத்தான்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பேரறிவாளன், இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன் எனும் மூன்று தமிழர்களின் தூக்குத்தன்டனையை ரத்துச் செய்யக் கோருவோர் மரணதண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர்.

கொடைக்கானல் ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவிற்கு வழங்கப் பட்ட தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் மூவரை எரித்துக் கொன்ற வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்பார்த்து இருக்கும் மூன்று தமிழர்களுக்கும் இக்கோரிக்கை வைக்கப்படுமா?


வணங்காமுடியாரே… கேள்விகளுக்குப் பதிலளித்துப் பதிலளித்து அலுப்பேறியதுண்டா? – புலமை பித்தன், புத்தன்சந்தை.இல்லை; ஆனால் சில வினாக்களைப் படிக்கும்போது அலுப்பும் சலிப்பும் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.


மணிப்பூரின் இரோம் சர்மிளா, அன்னா ஹஸாரே ஆகிய இருவரின் உண்ணாவிரதங்கள் ஒப்பிட்டுக் கூறுவீர்களா? – ப.கோ. வசீகரன்.இரோம் சர்மிளா உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது இருக்கும் ஒரு சட்டத்தை நீக்க வேண்டி!

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது புதிதாக ஒரு சட்டத்தை ஆக்க வேண்டி!

முன்னவரின் உண்ணாவிரதம் பதினோராண்டுகளாகத் தொடர்கிறது;

பின்னவரின் உண்ணாவிரதம் குறுகிய கால அளவில் இடைவேளைகளுடன் நடந்தது..

முன்னவர் இளம் வயதில் இந்திய ராணுவத்துக்கு எதிராகப் போராடுகிறார்.

பின்னவர் தம் இளமைக் காலத்தை இந்திய ராணுவத்தில் கழித்திருக்கிறார்.

முன்னவரின் போராட்டத்துக்கு ஊடக வெளிச்சமோ விளம்பரமோ படித்த மேல்தட்டு வர்கத்தின் ஆதரவோ அறிவு ஜீவிகளின் பின்புலமோ இல்லை; பின்னவருக்கு இவை கேட்காமலே கிடைத்தன.

முன்னவருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயங்கும் அரசு பின்னவரோடு பேச ஓடோடி வருகிறது.

முன்னவரைக் கைது செய்து வலுக்கட்டாயமாகத் திரவ உணவு புகட்டும் அரசு பின்னவரைக் கைது செய்து விட்டுச் சிறையை விட்டு வெளியே போ எனக்கெஞ்சியது.

முன்னவர் அரசின் (ராணுவ)அழித்தொழிப்புத் திட்டத்துக்கு எதிராகப் போராடுகிறார்.

பின்னவர் அரசை (ஊழலின்)அழித்தொழிப்புக்கு வற்புறுத்துகிறார்.


ஜெயாவை அம்மா என்றும் தமிழினத் தலைவி என்றும் சீமான் சொல்லுகிறாரே? – பாஷா, புதுச்சேரி.“அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” எனக் கவுண்டமணி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

கருணாநிதியின் மீதுள்ள கோபத்தில் சீமான் ஜெயலலிதாவைப் புகழலாம்..ஜெயலலிதாவைப் புகழ்ந்த வை கோபாலசாமியையும் ராமதாசையும் சீமான் நினைத்துப் பார்க்கட்டும்.


அப்சல் குருவுக்கு ஆதரவாக குண்டுவைத்ததுபோல் முருகன், சாந்தன் மற்றும்பேரறிவாளனுக்கு ஆதரவாக தூக்குத்தண்டனை விதிக்கக்கூடாது என்று ஏன் யாரும்குண்டு வைக்கவில்லை? – ரத்ன சபாபதி, வேலூர்.அப்சல்குரு தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிவிடக்கூடாது என நினைத்தவர்கள், அவருக்கு ஆதரவாகக் குண்டு வைத்ததாகச் செய்தி வெளியிட்டார்கள். முருகன் சாந்தன் பேரறிவாளன் மூவரும் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என உண்மையாகவே பலர் நினைப்பதால் அவர்களுக்கு ஆதரவாகக் குண்டு வைத்ததாகச் செய்தி பரவவில்லை.


சென்னைக்கு அடுத்து பெரிய நகரம் எது? கோவையா? மதுரையா? – ஜாஃபர், கோவை.கோவை.

கோவை மாநகராட்சியின் எல்லை 105.6 ச. கிமீ பரப்பளவில் உள்ளது.

மதுரை மாநகராட்சியின் எல்லை 51.96 ச. கிமீ பரப்பளவில் உள்ளது.


கோரிக்கை நிறைவேறாமல் உண்ணாவிரத போராட்டம் முற்றுபெறாது என அறிவித்திருந்த ஹஸாரே குழு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது. அப்படியெனில் ஊழலுக்கு எதிராக ஹஸாரேவின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டதா? எனில் இனிமேல் நாட்டில் ஊழல் குறையும் என எதிர்பார்க்கலாமா? – அருள், கத்தர்.

அரசின் வாக்குறுதியை நம்பி ‘விட்டார்’…

அவ்வளவுதான்.

அதற்காகக் கோரிக்கைகள் நிறைவேறிவிட்டனவா…. இனி ஊழல் குறையுமா என வினவுவது அதீத எதிர்பார்ப்பு.

அன்னா ஹசாரே அரசை நம்பிக் காத்திருப்பதுபோல நீங்களும் காத்திருங்கள்.


(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)

வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

Source : http://www.inneram.com/

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: