RSS

உலகை அச்சுறுத்தும் தூக்கமின்மை – ஓர் அறிவியல், ஆன்மீகப் பார்வை.

06 Aug

imagesபகலில் ஓடியாடி திரியும் மனிதன் இரவிலே தூக்கத்தினால் சுருங்கி விடுகின்றான். இயங்கிக் கொண்டிருக்கும் உடம்பிட்கு ஓய்வு என்பது தேவையான ஒன்றாகும். பகலில் கடன் சுமையால் அல்லல் படுபவன் கூட, இரவில் தன்னை மறந்து நிம்மதியாக தூங்குகின்றான். சுருக்கமாகச் சொன்னால் தூக்கம் என்பது இறைவன் நமக்களித்த அருளாகும்.

அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும்,பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.

(அல்குர்ஆன் – 25: 47)

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன், இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும்,சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான்.

(அல்குர்ஆன் – 6 :96)

ஓய்வை தரக்கூடிய தூக்கம் எவ்வாறு உருவாகின்றது?

மனித மூலையில் மெலடொனின் (Melatonin) என்ற ஹோர்மோன் ஒன்று சுரக்கின்றது. இந்த ஓமோன் உறக்கத்தைத் தூண்டும் ஒரு சுரப்பியாகும். இது வெளிச்சத்தில் குறைவாகவும், இருளில் கூடுதலாகவும் சுரக்கின்றது. அதனால் தான் இரவு என்றாலே உலகமே தூக்கத்தில் அயர்ந்து விடுவதுடன் பகலில் கூட மனிதன் இருட்டு மூலையைத் தேடி சென்று தூங்குவதற்கு எத்தனிக்கின்றான்.

 • தூக்கமின்மை. – (Insomnia)

  சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரங்கள் தூங்க வேண்டும் என்று மருத்துவ உலகம் சிபாரிசு செய்வதாக லன்டன் பி.பி.சி இணையதள செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

  ஆனால் எம்மில் சிலருக்கு எவ்வளவு தான் புரண்டு படுத்தாலும் தூக்கம் வராமல் இருப்பதுண்டு. அதே நேரத்தில் தூக்கத்தை தாமாகவே இல்லாமல் செய்வதுமுண்டு. உதாரணமாக இரவு நேரத்தில் நாம் விளித்திருப்பதைக் கூறலாம்.

  மூலையில் சுரக்கும் Serotin என்ற சுரப்பியின் அளவு குறையும் போதே தூக்கமின்மை ஏற்படுகின்றது. இதுவொரு நோயல்ல. ஆனால் இதுவொரு நோயின் அறிகுறியாகும். இதனால் ஏற்படும் விளைவுகள் பாரிய அளவில் நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

  தூக்கமின்மையினால் மனிதனுக்குள் சுமார் 80 வகையான பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன என்றும், முறையான தூக்கமின்மையினால் மனிதனின் உடல் செயல்பாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்றும், மரபனுவில் பாரிய மாற்றத்தையும் உண்டாக்குகின்றது என்றும் ஐக்கிய இராச்சியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். (மாலை மலர், பி.பி.சி)

  தூக்கமின்மையினால் உயிரனுக்கள் (விந்தனுக்கள்) குறைகின்றது. என்று மருத்துவ உலகம் வாதிக்கின்றது. குறைந்த தூக்கத்தை உடையவர்களுக்கு இல்லறத்தில் நாட்டமில்லாமல் போவதுடன், நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்து மன அழுத்தமும் ஏற்படுகின்றது என்று தெரிவிக்கின்றார்கள். (தினமலர், பி.பி.சி)

  தூக்கமின்மைக்கான காரணங்களும், தீர்வுகளும்.

  பெருகி வரும் இணையதள பாவனை.

  தூக்கமின்மைக்கான மிக முக்கிய காரணம் இணையதளத்திற்கு மனிதன் அடிமையாகிவிட்டான் என்பதேயாகும். அதிலும் குறிப்பாக சமூக வலை தளங்களில் தனது காலத்தை கழிப்பதுதான். பொன்னான தூக்கத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு இரவு முழுதும் மேலதிகமான வணக்கத்தை நிறைவேற்றுவதே மார்க்கத்தில் வரம்பு மீறிய செயலாக கருதப்படுகின்றது. ஆனால் இன்று மார்கம் தெரிந்தவர்கள் கூட தன் உடம்பை கவனிக்காமலும், தன் மனைவியின் உணர்வுகளை புரியாமலும் இணையதளங்களில் தங்கள் நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

  இது மார்க்கத்தில் மிகவும் வெருக்கத்தக்க செயலாக கருதப்படுகின்றது.

  அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

  என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ்வே! நீ பகல் எல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குதாகக் கேள்விப்பட்டேனே! (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். நான், “ஆம் (உண்மைதான்) அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதே! (சில நாள்) நோன்பு நோற்றுக்கொள். (சில நாள்) நோன்பை விட்டு விடு! (இரவில் சிறிது நேரம்) நின்று வணங்கு! (சிறிது நேரம்) உறங்கு! உன் உடலுக்கென (நீ செய்ய வேண்டிய) கடமைகள் உனக்கு உண்டு. உன்னுடைய கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு. உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு” என்று சொன்னார்கள்.

  (புகாரி – 5199)

  இரவில் ஆரம்ப நேரத்தில் உறங்கிப் பழக வேண்டும்.

  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் ஆரம்ப நேரத்தில் தான் உறங்குவார்கள்.

  அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

  நான் அயிஷா (ரலி) அவர்களிடம், “நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரவின் ஆரம்பப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழுவார்கள். பிறகு தமது படுக்கைக்குத் திரும்புவார்கள். முஅத்தின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொன்னதும் விரைவாக எழுந்து குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால் அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்பட்டுவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

  (புகாரி – 1146)

  ஆயிஷா (ரலி) அவர்கள் தன் கணவர் முஹம்மது (ஸல்) அவர்கள் உறங்கும் நேரத்தை அறிந்தே வைத்திருந்தார்கள். இன்று பெரும்பாலானவர்களின் மனைவியர்கள் தம் கணவர்கள் தூங்குகின்றார்களா? விழித்திருக்கின்றார்களா? என்பது கூட தெரியாத நிலையில் இருக்கின்றார்கள். இதனால் அவர்களின் குடும்ப வாழ்வில் நிறைய சிக்கள்களும், சங்கடங்களுமே ஏற்படுகின்றன.

  நன்மைக்காக விழித்திருக்கின்றார்களோ இல்லையோ, வீனான காரியங்களில் ஈடுபடுவதற்கு மனிதன் தனது பொன்னான இரவு நேரத்தை வீணடிக்கின்றான். அல்லாஹ்வின் தூதரவர்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றார்கள்.

  அபூபர்ஸா (நள்லா பின் உபைத்) (ரலி) அவர்கள் கூறியதாவது:

  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப்பின் (உறங்காமல் வீனாக) பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள். (புகாரி – 568)

  ஆரம்ப நேரத்தில் உறங்குவதுதான் சிறந்தது என மருத்துவ உலகமும் இன்று இஸ்லாத்தின் செய்தியை உறுதிப்படுத்துகின்றது.

  நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை மருத்துவப் பேராசிரியர் ஜேம்ஸ் காங்விஸ்க் தலைமையிலான ஆய்வுக் குழு, மொத்தம் 15,659 வளரிளம் பருவ மாணவ மாணவியரிடம் ஆய்வு மேற்கொண்டது. இரவில் சீக்கிரமாகவே தூங்குவதால் போதுமான அளவில் தூங்கமுடிகிறது. இதனால் மன அழுத்தத்துக்கு முக்கிய காரணியாக இருக்கும் தூக்கமின்மை பிரச்சனை நீங்குவதோடு, மன அழுத் பாதிப்பில் இருந்து வெகுவாக பாதுகாத்துக் கொள்ளவும் வழிவகுக்கப்படுகிறது என ஆய்வு முடிவுகள் பரிந்துரைக்கின்றன. நள்ளிரவு அல்லது 12 மணி நேரத்துக்குப் பிறகு படுக்கைக்கு செல்பவர்களுக்கு இரவு பத்து மணி அல்லது அதற்கு முன்பு உறங்கச் செல்பவர்களைக் காட்டிலும் 24 சதவீதத்துக்கும் அதிகமான மன அழுத்தமும், அதன் விளைவாக 20 சதவீதத்துக்கும் அதிகமாக தற்கொலை எண்ணமும் ஏற்படுவதற்கான அபாயம் உண்டு என்று எச்சரிக்கிறது, அந்த ஆய்வு.

  (http://youthful.vikatan.com/youth)

  மனக் குழப்பம்.

  எம்மில் பலர் படுக்கை அறைக்குள் கூட கவலையுடனேயே நுழைகின்றோம். பகலில் நிகழ்ந்த மனத் தாக்கங்களுக்கு இரவில் வாடி வருந்துகின்றோம். இதனால் அன்றிரவு முழுதும் தூக்கமின்மையால் தவிக்கின்றோம்.

  மருத்துவ உலகம் இதற்கு ஒரு தீர்வை சொல்கின்றது. அதாவது தூக்கம் வராதவர்கள் தூக்க செல்லும் போது அவர்களின் மன நிலையை மாற்ற வேண்டும் என்று சொல்கின்றது.

  நபியவர்கள் கூட இதற்கு தெளிவானதொரு வழிகாட்டலை தந்துள்ளார்கள். தூங்குவதற்கு செல்லும் போது ஒவ்வொரு மனிதனும் நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகளை ஓதும் போது அவர்களின் மன நிலை இறைவனின் பக்கமும், மரண சிந்தனையின் பக்கமும் சென்று விடுகின்றது. இப்படியொரு மனிதன் தனது சிந்தனையை இறை நினைவின் பக்கம் கொண்டு செல்லும் போது தூக்கம் தானாக ஏற்படுவதற்கான சிந்தனை மாற்றம் அங்கு நடை பெறுகின்றது.

  உதாரணமாக தூங்குவதற்கு முன்பு ஓதுவதற்காக பல பிரார்தனைகளை கற்றுத் தந்த இறைத் தூதர் அவர்கள் இப்படியொரு பிரார்த்தனையும் கற்றுத் தருகின்றார்கள். இப் பிரார்த்தனை மனிதனை இறை சிந்தனையின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகும்.

  பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

  என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் “நபியை நான் நம்பினேன்.”என்று பிராத்தித்துக்கொள்! (இவ்வாறு நீ பிராத்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகிவிடுகிறாய். இந்தப் பிராத்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்! (புகாரி – 247)

  அமுக்குப் பேய் என்பது உண்மையா?

  சிலர் தூங்கிக் கொண்டிருக்கும் போது தன்னை அமுக்குப் பேய் அமுக்கியதாக பயந்து விளித்துக் கொள்வதுடன், அன்றிரவு முழுவதும் மனம் குழம்பி தூக்கத்தை கெடுத்துக் கொள்கின்றார்கள். தூக்கத்தின் போது மூலை ஓய்வு அடைகின்றது என்பது முற்றிலும் உண்மையல்ல. தூக்கத்தின் போது மூலையானது ஏனைய உறுப்புகள் ஓழுங்காக இயங்குகின்றதா? என்று சரிபார்த்துக் கொள்கின்றது. அந்த வகையில் தான் காலை தூக்கு, கையைத் தூக்கு என்ற சில கட்டளைகளை மூலை கை, கால் போன்ற உறுப்புகளுக்கு பிரப்பிக்கின்றது. சில சமயங்களில் அக்கட்டளை செயல் வடிவம் பெற வாய்ப்பிருந்தும் எம்மால் கை, கால்களை தூக்க முடியாமல் அல்லது திருப்பக் கூட முடியாமல் போயிருக்கலாம். இந்நேரம் நமது செயல்பாடுகள் அற்றுப் போவதினால் தான் கை, கால்களை யாரோ கட்டிப் போட்டதைப் போல் தோன்றுமே தவிர அமுக்குப் பேய் வந்துவிட்டதென்று அர்த்தமல்ல.

  தூக்கத்தைக் கெடுக்கும் அசுத்தம்.

  பகல் முழுவதும் ஓடியாடித் திரிந்த களைப்பினால் பெரும்பாலானவர்கள் கட்டிலைப் பார்த்ததும் மல்லாக்க விழுந்து தூங்க முற்படுகின்றார்கள். ஆனால் இது அவர்களுக்குறிய ஆரோக்கியமான தூக்கத்தை பெற்றுத்தராது. தூக்கமின்மையினால் அவதியுறுபவர்களுக்கு தூங்கச் செல்வதற்கு முன்பாக குளித்து சுத்தமாகுமாறு நவீன மருத்துவம் அறிவுரை வழங்குகின்றது. (www.OneIndia)

  மருத்துவ உலகம் இன்றைக்கு வழங்கும் அறிவுரைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கிவிட்டது.

  பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

  என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள். (புகாரி – 247)

  ஆகவே நாம் தூங்கச் செல்லும் முன்பு நம்மை சுத்தம் செய்து கொள்வது சிறந்த தூக்கத்தை பெற்றுத் தரும்.

  தூங்குவதற்கு முன் எண்ணுதல். – Counting Sleep.

  தூக்கமின்மையினால் அவதிப்படுபவர்களுக்கு Counting Sleep செய்யுமாறு அதாவது தூங்குவதற்கு முன் இலக்கங்களை எண்ணுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றார்கள். இன்றைக்கு உலகில் பல பாகங்களிலும் நடை முறையில் உள்ள ஒரு மருத்துவ செயல்பாடாக இது மாறியிருக்கின்றது. உதாரணமாக இங்கிலாந்தை சேர்ந்த மக்கள் தூங்கச் செல்லும் போது சுமார் 37 நிமிடங்கள் வரை எண்ணுவதற்கு நேரத்தை செலவு செய்கின்றார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. (Amarkkalam.com)

  இன்றைக்கு மருத்துவ உலகம் சொல்லும் செய்தியை இஸ்லாமியர்கள் 1400 வருடங்களாகவே நடை முறைப்படுத்தி வருகின்றார்கள்.

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் பெரியவன்‘ என்று முப்பத்து நான்கு முறையும், “அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்விற்கே‘ என்று முப்பத்து மூன்று முறையும், “சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்‘ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள் (புகாரி – 3113) (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

  தூங்கச் செல்லும் முன்பு இலக்கங்களை எண்ணுவதினால் வெரும் தூக்கம் மாத்திரம் ஏற்படும். ஆனால் இஸ்லாம் சொல்வதைப் போல் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று சொல்லும் போது எண்ணிய வகையில் தூக்கமும் ஏற்படும். அதே நேரம் இறைவனிடம் நன்மையும் கிடைக்கும். என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

  தூக்க மாத்திரைகள் தீர்வாகுமா?

  தூக்கத்தை தேடும் பலர் தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாகின்றார்கள். அனைத்து தூக்க மாத்திரைகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையே! தூக்க மாத்திரையின் உபயோகம் வேறு விதமான பல நோய்களுக்கும் நம்மை ஆளாக்கிவிடக் கூடியதாகும். ஆனால் இஸ்லாம் சொல்வதைப் போல் நமது வாழ்வை நாம் மாற்றி அமைத்து, தூங்குவதற்கு முன்னர் நபியவர்கள் காட்டிய வழிமுறைகளை பின்பற்றும் போது நிம்மதியான, ஆரோக்கியமான தூக்கத்தை நாம் நம்வாழ்வில் பெற்றுக் கொள்ள முடியும்.
  http://rasminmisc.com/insomnia-and-islam/

  ALAVUDEEN

  Advertisements
   
 • Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: